தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையின் பூர்வகுடிகள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறதா? - ஓர் அலசல் - tamilnadu government

பூர்வகுடி மக்கள் வசிக்கும் பகுதி திடீரென ஆக்கிரமிப்பு பகுதிகளாக மாறியதா? அல்லது ஆக்கிரமிப்பு பகுதிகளில் தான் மக்கள் வசிக்கின்றனரா? அப்படி இருந்தால் இந்த மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையின் பூர்வகுடிகள் நிலங்களை ஆக்கிரமிக்கிறார்களா? - கடும் வேதனையில் மக்கள்!
சென்னையின் பூர்வகுடிகள் நிலங்களை ஆக்கிரமிக்கிறார்களா? - கடும் வேதனையில் மக்கள்!

By

Published : May 25, 2022, 7:13 AM IST

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 259 வீடுகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏனென்றால், இங்குள்ள மக்கள் பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்து இருப்பதாக ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜூராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23 ஆம் தேதி வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி 110 வீடுகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், குடியிருப்புகள் இடிக்கப்படுவதை எதிர்த்து, மே 8 ஆம் தேதி கண்ணையன்(58) என்பவர் தீ குளித்து உயிரிழந்தார். இச்சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்ணையன் உயிரிழப்பு அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகவும் மாறியது. இதனால் வீடுகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.


இப்படி மக்கள் வசிக்கும் பகுதி திடீரென ஆக்கிரமிப்பு பகுதிகளாக மாறியதா? அல்லது ஆக்கிரமிப்பு பகுதிகளில் தான் மக்கள் வசிக்கின்றனரா? அப்படி இருந்தால் இந்த மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கருப்பர் நகர வரலாறு: வெள்ளையர் என்ற ஆங்கிலேயர்கள் வடக்கில் ராயபுரத்தையும், தெற்கில் கூவம் முகத்துவாரத்தையும், மேற்கில் பக்கிங்ஹாம் கால்வாயினையும் சூழ்ந்த நிலையில் வெறும் 4 கிலோ மீட்டர் நீளம், 2 கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாகத்தான் மதராஸ் மாநகரை உருவாக்கினார்கள். இவர்கள் உருவாக்கிய கோட்டை தான், இன்றும் தமிழ்நாடு சட்டமன்றமாக செயல்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட இந்த கோட்டையின் உள்ளே இருப்பவர்கள் வெள்ளையர்கள் (ஆங்கிலேயர்கள்) என அழைக்கப்பட்டனர். மேலும், இதர பணிகளுக்காக தினசரி கூலிகளாக வெளியில் இருப்பவர்கள் கருப்பர்கள் எனவும் அழைக்கப்பட்டு வந்தனர். இந்த கருப்பர்கள் தான் சென்னையின் பூர்வகுடிகளாக தற்போது வரை அறியப்பட்டு வருகிறார்கள்.

அதேசமயம், சென்னையில் கால்வாய் மற்றும் நீர்நிலைகளின் அருகில் இருந்த மக்களும் பூர்வகுடிகளாக கருதப்படுகின்றனர். சென்னை நகரத்தின் வளர்ச்சிக்கு பூர்வகுடி மக்களின் பங்கு அதிகமாக இருந்திருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலை மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் வாழும்பகுதி பெரும்பாலும் குடிசை பகுதிகளாகவே காணப்படுகிறது.


இதற்கிடையில், கால்வாய்க்கு அருகில் உள்ள பகுதிகளில் 1971ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பகுதிகளாக மாறி இருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி நீதிமன்றங்களை நாடி இப்பகுதி ‘ஆக்கிரமிப்பு பகுதி' என உத்தரவு பெற்று வருவது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே சென்னையில் பலபகுதிகளில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வீடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடு: இதுகுறித்து இப்பகுதியைச் சார்ந்த சஞ்சய், “நாங்கள் இங்கே நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றோம். இப்பகுதியை மையமாக கொண்டுதான் தொழில் மற்றும் பிற இடங்களில் வேலை செய்து வருகின்றோம். இப்பகுதி 1971 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பகுதியாகும். ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜூராய் என்பவர் அருகில் உள்ள இடங்களில் பிளாட் போட்டு, வீட்டுமனை விற்பனை செய்ய வீடுகளை கட்டினார்.

அந்த வீட்டுமனை இடத்திற்கு வழித்தடம் சிறிய அளவிலே உள்ளது. இதன் காரணமாகவே இங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டால், வழித்தடம் கிடைத்துவிடும் என்ற நோக்கத்தோடு உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அந்த வழக்கில் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கால்வாய்க்கும் நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. குழுந்தைகளுக்கு தேர்வு காலம் என்பதால் மிகவும் சிரமமாக உள்ளது. ஒரு தனி நபருக்காக அரசு ஆதரவாக செயல்படுவது வேதனையாக உள்ளது” என கூறினார்.

மேலும், இதுகுறித்து சமூக ஆர்வலரான சிட்டிசன் செந்தில் கூறுகையில், “நீர்நிலை மறுசீரமைப்பு, மெட்ரோ ரயில் பணிகள், சாலை விரிவாக்கம், அழகுபடுத்தும் பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உள்ளிட்டவை பூர்வகுடி மக்களை வெளியேற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

என்னதான் வளர்ச்சி பாதைகளை உருவாக்க அரசு பல திட்டங்களை வகுத்தாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்னும் முறை உள்ளது. அதை அரசு கவனமாக கையாள வேண்டும். அப்படி கவனமாக கையாளும் பட்சத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்” என கூறினார்.

மக்கள் துன்புறுத்தல்: தொடர்ந்து பெண்ணுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கீதா, “கோவில் இடத்தை வாங்கிய ஒரு தனியார் முதலாளி வழித்தடம் வேண்டும் என்பதற்காக வழக்கு தொடுத்துள்ளார். இது 1971 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட பகுதி ஆகும். கால்வாய்க்கு ஒரு பகுதியில் 20 அடியில் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பகுதியில் 60 அடியில் இருந்து வீடுகள் அகற்றப்பட்டிருக்கிறது. தேர்வு காலம் என்பதால் மாணவர்களின் வீட்டை இடிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு அதையும் இடித்தனர். முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையை அரசு தரப்பு வழக்கறிஞர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அரசு சரியாக வாதங்களை முன்வைத்து தீர்ப்பு வாங்கி இருந்தால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக சரியான வாதங்களை வைக்கவில்லை. இவர்களுக்கும் இதே இடத்தில் பட்டா வழக்க வேண்டும்" என கூறினார்.

சென்னையில் இதுபோன்ற அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பலரின் ஆபத்தான வாழ்க்கை நிலையை இந்த சம்பவம் உணர்த்துகிறது. மேலும் பூர்வகுடிகளாக இருக்கும் மக்களை அகற்றி, நகரத்தின் வெளிப்புறத்தில் வைக்க அரசும் ஆதரவாக இருக்கிறது என்பதுதான் மக்களின் வேதனையாக இருக்கிறது. மிக விரைவில் இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது தான் இந்த பூர்வகுடி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:ஜி ஸ்கொயர் பிரச்சனை: விகடன் குழுமம் சார்பில் புகார்

ABOUT THE AUTHOR

...view details