தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒர் அத்திப்பட்டி; சிட்டிசன் பட பாணியில் காணாமல் போன பரங்கிமலை கிராமம்.. அறப்போர் இயக்கம் பரபரப்பு புகார்! - பத்திரப்பதிவுத்துறையின் முதன்மைச் செயலாளர்

சிட்டிசன் திரைப்படத்தில் வருவது போன்று அரசு சார் பதிவாளர் தனியாருடன் கூட்டணி மேற்கொண்டு போலிப் பத்திரப்பதிவில் ஈடுபட்டதையடுத்து பரங்கிமலை கிராமத்தில் உள்ள அரசு நிலங்கள் காணமல் போயுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு அத்திப்பட்டி: காணாமல் போன பரங்கிமலை கிராமம்
சென்னையில் ஒரு அத்திப்பட்டி: காணாமல் போன பரங்கிமலை கிராமம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 4:54 PM IST

சென்னை:சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி காணமல் போனதாக கூறுவது போல் தற்போது போலிப் பத்திரப்பதிவின் மூலம் பரங்கிமலை கிராமத்தில் உள்ள அரசு நிலங்கள் காணமல் போயுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சார்பில் தலைமைச் செயலாளர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையின் முதன்மைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "சென்னை பரங்கிமலையில் ரூபாய் 250 கோடிக்கும் மேற்பட்ட அரசு நிலங்களை மீட்க கோரியும் வருவாய் மற்றும் பத்திர பதிவு துறையின் ஆதரவுடன் எப்படி அரசு நிலங்கள் சென்னையில் உள்ள பரங்கிமலை பகுதியில் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகிறது. பரங்கிமலை கிராமத்தில் பல நிலங்கள் அரசு நிலங்களாக ஆங்கிலேயர் காலம் முதல் இருந்து வருகிறது. ஆனால் வருவாய்த்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை ஆதரவுடன் இதை தனியார்கள் மற்றும் நிலம் மாஃபியாக்கள் சூறையாடி வருவதால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது. 2015 அக்டோபர் மாதம் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை இரண்டாம் நிலை சார்பதிவாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில் பரங்கிமலை கிராமத்தில் உள்ள 36 சர்வே எண்களை குறிப்பிடப்பட்டு, அந்த சர்வே எண்கள் அனைத்தும் அரசு நிலங்கள் மற்றும் அந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் இனி செய்யக்கூடாது என்று தெளிவாக கூறியுள்ளார். ஆனால் இதை மீறி சார் பதிவாளர்கள் உமா, பாலகிருஷ்ணன், கீதா போன்றோர் பல பத்திரப்பதிவை மேற்கொண்டுள்ளனர். மேலும் பெரும்பாலான அந்த சர்வே எண்கள் இன்று வரை தனியார் கையில் உள்ளன.

சமீபத்தில் அரசு இந்தப் பகுதியில் மேற்கொண்ட மீட்டெடுப்பு பணி சில சர்வே எண்களில் மட்டுமே நடந்தது. மீட்டெடுக்கப்படாத சர்வே எண்களில் நடந்துள்ள முறைகேடுகள் ஊழல்கள் பற்றி இந்த புகாரில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். ஊழலை ஒழிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை அமைந்துள்ள எம்.கே.என் சாலையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் எதிர் நிலமான பாரத ஸ்டேட் வங்கி அமைந்துள்ள நிலமே அரசு நிலம் தான்.

பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1448 இல் அமைந்துள்ள இந்த நிலத்தில் 2019 ஆவண எண் 2601 மூலமாக வேதாந்தா என்னும் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கிக்கு ஐந்து வருட லீஸ் மாத வாடகையாக கிட்டத்தட்ட ஐந்து லட்ச ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்கிறது. அதாவது அரசு நிலத்திற்கு தனியார் ஒருவருக்கு பாரத ஸ்டேட் வங்கி மாதம் 5 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறது. இதை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளரின் பெயர் உமா. லஞ்ச ஒழிப்புத் துறையின் கண் முன்னே நடந்துள்ள இந்த மோசடி எப்படி பத்திரப்பதிவுத்துறை லஞ்ச ஒழிப்பு துறையின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறது என்பதை காண்பிக்கிறது.

இது மட்டுமின்றி அரசு நிலங்களை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் தனியார் வங்கிகளில் இருந்து கடன் பெற்று வருகிறார்கள். வேதாந்தா என்னும் நிறுவனம் எச்டிஎப்சி வங்கியில் ரூபாய் 5 கோடி இந்த நிலத்தை வைத்து 2015 ல் கடன் வாங்கி இருக்கிறது. இதுவும் பத்திரப்பதிவு துறையில் ஆவண எண் 2367/2015 என்று பதியப்பட்டுள்ளது. இதேபோல் 2018 இல் ஆலந்தூர் தாசில்தார் பதிய கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள சர்வே எண் 1356 இல் ஜி.எஸ்.டி ரோட்டில் எண் ஒன்பதில் அமைந்துள்ள 21048 சதுர அடி நிலத்தை பத்திரப்பதிவுத்துறை பதிவு செய்துள்ளது.

அரசு நிலத்தை அடமானமாக வைத்து பிஎஸ் ஸ்ரீனிவாசன், மணி, சுந்தர், மோகன் மற்றும் சரவணன் ஹெச்டிஎஃப்சி வங்கியில் 34 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதை ஆவண எண் 120/2018 என்று சென்னை தெற்கு இணை இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்துள்ளார் . ஒரு பதிவு மேற்கொள்வதற்கு முன்பு சார்பதிவாளர் அந்த நிலம் அரசு நிலமா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது பத்திரப்பதிவுத்துறை சட்டம் மற்றும் விதியில் உள்ளது. ஆனால் சார் பதிவாளர் உமா ஆலந்தூர் தாசில்தார் கடிதம் இருந்தும் தனியார்களுடன் கூட்டு சதி செய்து, இதை பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதேப் போல 2016 மற்றும் 18 இல் ஆவண எண் 2196/2016 மற்றும் 912/2018 மூலம் ஸ்ரீராம் என்பவர் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியில் அடமானமாக சர்வே எண் 435 இல் 5355 சதுர அடி அரசு நிலத்தை வைத்து இரண்டு கோடி மற்றும் ஒரு கோடி கடன் வாங்கி, அதை பத்திரப்பதிவும் செய்துள்ளனர். மக்கள் ஒரு லோன் வாங்க வங்கிகளில் எப்படி அலைய உள்ளது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அரசு நிலத்தை வைத்து எப்படி கூட்டு சதி மூலம் தனியார், அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் சேர்ந்து மிகப்பெரிய மோசடியை செய்து வருகிறார்கள் என்பதை இங்கு பார்க்கிறோம்.

இந்த நிலங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் மூல பத்திரம் ஏதுமில்லை. ஓரிரு பத்திரங்கள் இதற்கு முன்பு பதியப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்துள்ளார்கள். அதற்கு முன் குறிப்பிடப்பட்டுள்ள மூலப்பத்திர ஆவணங்களை சென்று அறப்போர் இயக்கம் பார்த்ததில், அந்த ஆவண எண்கள் போலியானவை என்பதை கண்டறிந்தோம். வேறு சர்வே எண் சம்பந்தப்பட்ட ஆவணத்தை இதன் மூல ஆவணமாக குறிப்பிட்டு எழுதியுள்ளனர். இதற்கான அனைத்து ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் புகாரில் இணைத்துள்ளது. 2015 க்கு பிறகு நடந்துள்ள இந்த பத்திரப்பதிவுகள் சார் பதிவாளர்கள் பாலகிருஷ்ணன், கீதா, மற்றும் உமா மூலம் நடந்துள்ளது தெரிகிறது.

மேலும் பரங்கிமலை கிராமம் சர்வே எண் 442 இல் 54,000 சதுர அடியில் அமைந்துள்ள நிலம் மற்றும் பங்களா அரசு உடமையானது என்றும் இதில் யுவான் மேரி என்பவர் போலியாக 2020இல் பத்திரப்பதிவு செய்துள்ளார் என்றும் அந்த ஆவணத்தை ரத்து செய்தும் மாவட்ட பதிவாளர் சத்திய பிரியா 2023 ஆணை பிறப்பித்துள்ளார். 2022-ல் இந்த நிலத்தை மீண்டும் தனசேகரன் என்னும் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வரும்போது அப்போதைய சார்பதிவாளர் இதில் நடந்துள்ள மோசடியை கண்டறிந்து மாவட்ட பதிவாளருக்கு கடிதம் அனுப்பி அதன் வழியாக மாவட்ட பதிவாளர் இதை ரத்து செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆனால் இதில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளிவந்துள்ளது. மாவட்ட பதிவாளரின் ஆணையை அறப்போர் இயக்கம் சான்று ஆவணமாக அரசுக்கு விண்ணப்பித்து பெற்றது. அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் மிக அதிர்ச்சிகரமானது. நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் நிலத்தின் மூல பத்திரங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ரெக்கார்ட் ரூமில் volume-களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மூல பத்திரத்தையே உள்ளே சென்று மாற்றக்கூடிய வேலையை சார் பதிவாளர் துணையோடு தனியார் மாபியா செய்து வருவது அம்பலம் ஆகியுள்ளது.

இந்த நிலமானது யுவான் மேரிக்கு, அவர் சகோதரி நிலத்தை பத்திரப்பதிவு செய்வதுபோல் 1985/2020 மூலம் சார் பதிவாளர் உமா பதிவு செய்துள்ளார். இதன் மூலப்பத்திரமாக 2048/1937 குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் இந்த ஆவணம் 2022-ல் அடுத்த பத்திரப்பதிவிற்கு வரும்போது, சார் பதிவாளர் இந்த மூலப் பத்திரங்களை ரெக்கார்ட் ரூமில் சரி பார்க்கிறார். அப்போது இந்த 1937 ஆவணம் பரங்கிமலை கிராமத்தைச் சேர்ந்த ஆவணம் என்றும், மற்றொரு பக்கம் பெரும்பாக்கத்தை சேர்ந்த 4 சென்ட் நிலம் என்றும் இதில் இரண்டு மூல பத்திரங்கள் உள்ளதை கண்டறிந்தார்.

மற்ற ரிஜிஸ்டர் மற்றும் கணினி மயமாக்கப்படும் போது கணினியில் ஸ்கேன் செய்த ஆவணங்களுடன் சரி பார்க்கும் போதுதான் இது உண்மையிலேயே பெரும்பாக்கம் 4 சென்ட் நிலத்திற்கான ஆவணம் என்பதும் இதை ரெக்கார்ட் ரூம் சென்று மாற்ற முற்பட்டுள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது மாற்ற முற்பட்டு போதும் சார் பதிவாளர் உமா தான் அங்கு இருந்திருக்கிறார். இதை மாற்றியவர் ஜெயக்குமார் என்னும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்று CBCID வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த FIRல் சார் பதிவாளர் உமா மற்றும் அவருடைய சீனியர் அதிகாரிகளின் பெயர்களையும் சேர்க்காமல் தனியார்களின் பெயர்களை மட்டும் சேர்த்துள்ளது அதிர்ச்சிகரமான ஒன்று.

ஜெயக்குமாரை தனியார் மாஃபியாக்களுக்கும் அரசில் இருக்கக்கூடிய சில அரசு அதிகாரிகளே இயக்கி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பல ஆவணங்கள் இதுபோன்று மூலப் பத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மாவட்ட பதிவாளர் இந்த சொத்தின் ஆவணத்தை ரத்து செய்து இருந்தாலும் அரசு இந்த நிலத்தை இன்று வரை மீட்கவில்லை. மேலும் மூலப் பத்திரத்தை மாற்றக்கூடிய வேலைகள் பத்திரப்பதிவுத்துறையில் நடக்கும் மிகப்பெரிய ஆபத்தை நமக்கு காண்பித்துள்ளது. மக்களின் நிலம் எதுவும் பாதுகாப்பாக இல்லை என்பதும் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் கூட்டு சதி மூலம் யாருடைய மூலப் பத்திரம் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்பதும் இதிலிருந்து வெளிச்சம் ஆகிறது.

மேலும் பரங்கிமலை கிராமத்தில் பல அரசு நிலங்கள் மாஃபியாக்களால் சூறையாடப்பட்டுள்ளதால் வருவாய்த்துறை இந்த கிராமத்தின் பட்டா விவரங்களை மட்டும் இணையதளத்தில் இருந்து மறைத்துள்ளது தெரிய வருகிறது. சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல, பரங்கிமலை கிராமத்தை காணாமல் போகச் செய்துள்ளனர். பரங்கிமலை கிராமம் சுரையாடப்பட்டு வருவதை குறித்து அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை, CBCID, அரசுக்கும் மற்றும் அரசு நிலத்தை அடமானம் எடுத்துக்கொண்டு கடன் கொடுத்த தனியார் வங்கிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளது.

உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை, CBCID கிரிமினல் நடவடிக்கைகளையும் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை நிலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையும் தப்பு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். 250 கோடிக்கும் மேற்பட்ட இந்த நிலங்களை அரசு உடனடியாக மீட்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பட்டமளிப்பு விழா மேடையில் ஜெயலலிதாவை மனமுவந்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details