தமிழ்நாடு

tamil nadu

'ஒரு லட்சத்து 42 ஆயிரம் கூடுதல் கரோனா இறப்புகள்' - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

ஜனவரி 1 முதல் ஜூன் 25 வரையிலான காலகட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ளத் தகவலைவிட, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 143 கூடுதல் இறப்புகள் நிகழ்ந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

By

Published : Jun 27, 2021, 8:01 AM IST

Published : Jun 27, 2021, 8:01 AM IST

கரோனா
கரோனா

சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை அரசு தினசரி செய்தி அறிக்கையில் வெளியிட்டு வருகிறது.

ஆனால், அரசின் புள்ளி விவரங்களில் உயிரிழப்புகள் குறைத்துக் காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 25 வரை நடந்துள்ள இறப்புகளை, 2019ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்பு எண்ணிக்கை ஆவணங்களுடன் ஒப்பிடுகையில், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 143 கூடுதல் இறப்புகள் நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மறைக்கப்பட்ட கூடுதல் கரோனா இறப்புகள் குறித்து விவரிக்கும் அறப்போர் இயக்க நிர்வாகி.
தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 25 வரை 19 ஆயிரத்து 929 கரோனா இறப்புகளே நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பு கடந்த மே 26 வரை தமிழ்நாடு அரசின் பிறப்பு, இறப்பு அறிக்கை தகவலின்படி இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 796 இறப்புகள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முப்பது நாட்களில் அதிக உயிரிழப்புகள்

ஆனால், கடந்த முப்பது நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 528 இறப்பு விவரங்கள் சேர்க்கப்பட்டு, இறுதியாக ஜூன் 25 வரை, 4 லட்சத்து 49 ஆயிரத்து 324 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை கடந்த மே மாதத்திலேயே நிகழ்ந்துள்ளது என ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்படி அரசு தெரிவித்த கரோனா இறப்புகளைக் காட்டிலும் 7.13 மடங்கு அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. கரோனா இரண்டாம் அலை அதிகமாக இருந்ததால்தான் அதிகப்படியான உயிரிழப்புகள் நடந்தன என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

அரசு அனைத்து இறப்புகளையும் உடனடியாக ஒரு தன்னிச்சையான ஆய்வுக்கு உட்படுத்தி, கரோனா இறப்பு எண்களை திருத்த வேண்டும் எனவும்; அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஒரு எளிமையான குறைதீர்ப்பு வழியின் மூலம், கரோனா இறப்பு குறியீட்டுப்படி இறப்பின் காரணங்களை ஆவணங்களில் திருத்தி அமைக்க வேண்டும்.

இழப்பீட்டுத்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படும்

இல்லையானால் கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் அரசின் இழப்பீட்டுத் தொகைகளைப் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்டா பிளஸ் முதல் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details