தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்.. ஊழல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறப்போர் இயக்கம் புகார்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்துவதால் மக்கள் சார்ந்த பணிகளும், அரசு துறையில் ஊழல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக அறப்போர் இயக்கத்தின் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் 5 காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தொடரும் தொய்வு!
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் 5 காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தொடரும் தொய்வு!

By

Published : Jan 26, 2023, 9:10 AM IST

Updated : Jan 26, 2023, 10:09 AM IST

அறப்போர் இயக்கத்தின் உறுப்பினர் ராமகிருஷ்ணன் அளித்த சிறப்பு பேட்டி

சென்னை: அரசுத்துறைகளில் பெருகி வரும் ஊழலைத் தட்டிக்கேட்டு அம்பலப்படுத்தச் சாமானியர்களுக்குச் சட்டம் வழங்கிய அதிகாரமே ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’. இந்தச் சட்டத்தின்படி, அரசுத்துறை மற்றும் அரசு உதவிபெறும் துறைகளில் நமக்குத் தேவையான தகவல்களை எளிதாகக் கேட்டுப் பெற முடியும். ஆனால், அண்மைக் காலமாக மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள், மிகவும் மந்தமாக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மொத்தம் 7 பதவிகள் உள்ளன. அதில் ஒரு மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 மாநில தகவல் ஆணையர்கள் பதவிகள் ஆகும். இதில் மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்த ராஜகோபால் ராஜினாமா செய்தார். மேலும், 4 மாநில தகவல் ஆணையர்கள் பதவி காலம் முடிந்தது.

இதனால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் 5 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு ஒரு தேடுதல் குழுவை அமைத்தது. ஆனால் அந்த குழுவின் நடவடிக்கை மிகவும் தொய்வான நிலையில் உள்ளது. காலிப்பணியிடங்களை நீண்ட நாட்களாகியும் நிரப்பாததால் சாமானிய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகக் கொடுக்கப்படும் மனுவிற்குப் பதில் வருவதற்குக் காலதாமதம் ஆகிறது.

இந்த காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர் இடங்கள் காலியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராஜகோபாலன் உள்ளிட்ட 4 ஆணையர்கள் பதவிக்காலம் முடிவடைந்தது. இவர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. நீதிபதி தலைமையிலான குழு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, 2 முறை அதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்திருந்தது.

மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி பட்டியலை தமிழ்நாடு அரசிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஜனவரி மாதம் இறுதி ஆகிய நிலையில், இன்னும் நீதிபதி தலைமையிலான குழு பட்டியலை அரசிடம் வழங்கவில்லை. இதனால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையர்களே இல்லை.

இது எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றால், சாதாரண தகவல்களுக்காகவும், தான் விண்ணப்பம் செய்திருந்த ஓய்வூதியம் தொடர்பாகவும் மற்றும் தனக்கு கிடைக்காத அரசின் பல திட்டங்கள் தொடர்பாகவும் தகவல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளனர். மக்கள் அளித்த மனுவிற்கு குறித்த காலத்திற்குள் பதில் வருவது மிகவும் முக்கியம்.

அப்படி பதில் வராத பட்சத்தில், அதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்வது தலைமை தகவல் ஆணையரின் பணியாகும். அதேபோன்று அரசாங்கத்தில் உள்ள வெளிப்படை தன்மையும், பொறுப்புடைமையும் கண்காணிக்க வேண்டியது மற்றும் தகவலை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தலைமை தகவல் ஆணையரின் பணியாகும்.

தற்போது தலைமை தகவல் ஆணையர் இல்லாத சூழலில் இது போன்ற மக்கள் நலன் சார்ந்த பணிகள் தேக்கமாக உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் தகவல் வழங்குவதில் தமிழ்நாடுதான் கடைநிலையில் இருக்கின்ற செய்தியை பார்க்கிறோம். தற்போது உள்ள சூழ்நிலையில் 2ஆவது முறையீட்டு செல்லும்போது குறைந்த பட்சம் ஒரு வருடம் ஆகிறது.

தற்போது மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் இல்லாத பட்சத்தில், ஒரு மனுவிற்குப் பதில் வருவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை. காலம் தாழ்த்தப்படுகின்ற தகவல்கள், நீதிகளை வெளியே வரவிடாமல் தடுக்கும். பல துறைகளில் தகவல்கள் கிடைக்காமல், அரசு செயல்பாடுகளில் ஊழல் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு துறைகளில் நடைபெறக்கூடிய ஊழலை வெளிக்கொண்டு வருவதற்கும், அதனுடைய தகவலை பெறுவதற்கும் தகவல் ஆணையம் மிகவும் முக்கியம். இதனால் உடனடியாக நீதிபதி தலைமையிலான தேடுதல் குழுவிடம் இறுதி பட்டியலை தமிழ்நாடு அரசு பெற்று வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க:2022-ல் ஓடும் ரயிலில் 209 குழந்தைகள் பிறப்பு - ரயில்வே வெளியிட்ட தகவல்!

Last Updated : Jan 26, 2023, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details