தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இது தந்தை பெரியார் மண்! வன்முறையை தூண்டும் கூட்டத்தை எச்சரிக்கிறேன் - வைகோ - vaiko statement

சென்னை : தந்தை பெரியாரின் கருத்துக்களை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

By

Published : Apr 8, 2019, 11:29 PM IST

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திராவிடக் கழகத்தை சேர்ந்தவர்களும், இளைஞர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தந்தை பெரியார் சிலை உடைப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டது தமிழக மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. 1998 ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்ட தந்தை பெரியார் சிலையின் தலைப்பகுதி உடைக்கப்பட்டு தரையில் கிடந்ததைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்றளவும், தமிழகத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்களும், சிந்தனைகளும்தான் வெகுஜன மக்களை ஈர்த்து வருகின்றன .வரலாற்றில் மட்டுமல்ல, மக்கள் இதயங்களிலும் வாழும் தந்தை பெரியாரின் கொள்கை கோட்பாடுகள், சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பெரியாரின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கூட்டம் ஒன்று பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துவதையும், இழிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. திருச்சியில் 2018 டிசம்பர் 23 ம் தேதி லட்சோப லட்சம் இளம் வாலிப வேங்கைகளும் வீராங்கனைகளும் காவிரி வெள்ளம் போன்று கருஞ்சட்டைப் பேரணியில் அணிவகுத்து வந்ததை தமிழகமே கண்டு எழுச்சியுற்றது. ஆனால், மத சகிப்பின்மையோடு அவன்முறைகளையும் ஏவி வரும் கூட்டம் திர்ச்சியில் உறைந்தது.

மதவெறி சனாதனச் சக்திகளின் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் இந்துத்துவா சிந்தனைகளுக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் ‘கனலாக’ கனன்று கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் இது தந்தை பெரியார் மண் என்பதால்தான்.தந்தை பெரியாரின் கருத்துக்களை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் தந்தை பெரியார் சிலையை உடைத்து, கலவர விதைகளைத் தூவ நினைப்போரின் உள்நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டு, தமிழக அரசு இதைப் போன்ற தொடர் சிலை உடைப்பு நிகழ்வுகள் நடப்பதைத் தடுப்பதுடன், இதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details