சென்னை:பனையூரில் செப்.10 ஆம் தேதி நடைபெற்ற ஏ.ஆர் ரகுமான் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சிக்கு பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும், ரசிகர்களை உள்ளே அனுமதிக்காததால் விரக்தியில் விழா ஏற்பாட்டாளர்களை திட்டிக்கொண்டே ரசிகர்கள் சென்றனர். மேலும் டிக்கெட் பெற்ற ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என பணம் கொடுத்து நிகழ்ச்சியை காண பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்த ரசிகர்கள் பலர், "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சியை மறக்காவே மறக்காது நெஞ்சம் என தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு ஏ.ஆர் ரகுமான் உரிய பதில் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் X தளத்தில் (முன்பு ட்விட்டர்) பதிவிட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ஏ.ஆர் ரகுமானும் தனது X தளத்தில், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்து வந்த நிலையில், மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த், தங்களது ACTC ஈவன்ட்ஸ் இன்ஸ்டாகிராம் வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, " கடந்த செப்.10 ஆம் தேதி ஏ.ஆர் ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" என்ற பெயரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும் இந்நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஏ.ஆர் ரகுமான் சாருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியில் நிறைய அசௌகரியங்கள் நடந்துள்ளது. மேலும் டிக்கெட் வாங்கியும், சில அசௌகரியங்கள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் ரசிகர்களால் நிகழ்ச்சிக்கு உள்ளே வரமுடியாது சூழல் நடந்துள்ளது.
அதற்கான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முழு ஏற்பாடும் செய்யப்பட்டது. ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்கள், கூட்ட நெரிசல் காரணங்களால் ரசிகர்களால் நிகழ்ச்சிக்கு உள்ளே வரமுடியாமல் போனதற்கும், அன்று நடந்த அனைத்து விஷயங்களுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அந்த அனைத்து சம்பவத்திற்கு ஏசிடிசி முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும்.
இதுமூலம் நான் சொல்ல வருவது, ரகுமான் மிகப்பெரிய லெஜண்ட் ஆர்டிஸ்ட், அவரது பங்கு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தருவது. அதை அவர் சிறப்பாகவே செய்து கொடுத்தார். இதில் பல ரசிகர்களும் மகிழ்ச்சியாக நிகழ்ச்சியை அனுபவித்தனர். ஆனால், அந்த நிகழ்வு நடந்த பிறகு ஏ.ஆர்.ரகுமானை தாக்கி சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அவருக்கும் இந்த ஈவண்ட்க்கும், நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை.
ஆகையால், ரகுமானை மையப்படுத்தி எந்தவித செய்திகளையும் சமூகவலைதளத்தில் போடாதீர்கள் என மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முழுக்க முழுக்க நாங்கள் மட்டுமே காரணம். இதை நான் ஏற்கனவே பல முறை தெரிவித்துள்ளேன். இனியும் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எல்லா ஏற்படுகளையும் நாங்கள் முறையாகத் தான் செய்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக இது நிகழ்ந்துவிட்டது.
ஆகையால், இந்த நிகழ்ச்சிக்கு முறையாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள், உள்ளே செல்ல முடியாமல் திரும்பிச் சென்றிருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும். அது 500 ரூபாயாக இருந்தாலும் சரி 50 ஆயிரமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக பணம் திருப்பி ரீஃபண்ட் செய்யப்படும். இதற்கான இமெயில் ஐடி ஏற்கனவே நாங்கள் பகிர்ந்துள்ளோம். அதன் மூலம், பரிசோதனை செய்து பணம் திருப்பி தரப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: DVAC Raid: முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா வீட்டில் திடீர் சோதனை! முக்கிய ஆவணம் பறிமுதலா?