சென்னை: பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் "மறக்குமா நெஞ்சம்" என்ற பெயரில் Live In Concert நிகழ்ச்சி நேற்று (செப் 10) மாலை 7 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில் அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு மற்றும் பிளாட்டினம் என்று பல பிரத்யேக டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து டிக்கெட் வாங்கி வந்த ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் அதிருப்தி அடைந்தனர். இந்த நிகழ்ச்சிய காண வருபவர்களுக்காக சுமார் 20 ஆயிரம் இருக்கைகள் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாகவும், அதனால் உள்ளே செல்வோர் செல்ல முடியாமலும், டிக்கெட்டுக்கு ஏற்ற இடத்தில் அமர வைக்கப்படாமல் எங்கு வேண்டுமானலும் அமரும் நிலையிலும், சிலருக்கு இருக்கை இல்லாத நிலையும் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், குழந்தைகளை தவறவிட்டு சிலர் அவதியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிலர் டிக்கெட் வாங்கிவிட்டு இசை நிலழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பி சென்று விட்டனர். மொத்தத்தில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், இருக்கை வசதிகளும் இல்லாத மோசமான நிலை இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து உள்ளனர்.