சென்னை :ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவக்கல்லூரி, பிஎஸ்பி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியியல் நிறுவனம் மற்றும் மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவக்கல்லூரிகள் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு கட்டணமாக 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை - கேகே நகர் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ.1 லட்சமும், வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்வதற்கான கட்டணமாக ரூ.53 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 3 தனியார் பல்கலைக்கழங்களில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பிற்காக கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை (தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம்), ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நிறுவனம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியியல் நிறுவனம் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு கட்டணமாக ரூ.5 லட்சத்து 40 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.16 லட்சத்து 20ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் கட்டணமாக, அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டண விவரம் www.tnhealth, tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியரின் வாரிசுகள் தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கும் கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக 6000 ரூபாய், சிறப்புக் கட்டணமாக 2000 ரூபாய், பல்கலைக் கழக கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட 7473 ரூபாய் நிர்ணயம் உட்பட ரூ.18,073ம், பிடிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக ரூ.4000, சிறப்புக் கட்டணமாக ரூ.2000, பல்கலைக் கழக கட்டணமாக (ஜிஎஸ்டி உட்பட)7473 ரூபாய் உட்பட 16,073 என நடப்பாண்டு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க :MBBS: அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர ஆன்லைனில் பதிவு செய்யலாம்!