சென்னை:மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட்டு, அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் விசாகன் மற்றும் தலைமை அலுவலக அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, “அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். இதில் எவ்வித விதிமீறல்களும் இருக்ககூடாது. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும்.
மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும்” எனக் கூறினார். மேலும், “மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.