சென்னை:44ஆவது சர்வதேச சதுரங்கப்போட்டியில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினருக்குப் பாராட்டுச்சான்றிதழை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “44ஆவது சர்வதேச சதுரங்கப்போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் உலகமே வியக்கும் வகையில் சிறப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்றது.
அனைவரும் வியக்கத்தக்க வண்ணம் மிக பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். சுமார் 180 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு முன்னேற்பாடுகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் முன்னெடுக்கப்பட்டது.
சிறப்பு மருத்துவக்குழு மற்றும் நிலையான மருத்துவக்குழுவினர், சதுரங்கப்போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் தங்கியிருந்த விடுதிகளிலும், போட்டி நடைபெறும் அரங்கிலும் முகாம் அமைத்து மருத்துவ சேவை அளித்தனர். அவசரகால மேலாண்மைக்குழு, துரித மருத்துவ சேவைக்காக 30 அவசரகால ஊர்திகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. 931 இடங்களில் நோய்த்தடுப்புக்காக மருந்து புகை அடிக்கப்பட்டது. மேலும், 771 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 435 இடங்களில் குளோரின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
394 இடங்களில் கொசு புழு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு காப்பீடு மூலம் உள்நோயாளியாக ரூ.2 லட்சம் வரை செலவில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்கு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் வீரர்களும், வீரர்களின் நிர்வாக குழுவினருக்கு பிரத்யேக காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.
44ஆவது சர்வதேச சதுரங்கப்போட்டியில் பணியாற்றிய மருத்துவத்துறையினருக்குப் பாராட்டு விழா 629 புற நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவக்குழுவினரால் புற நோயாளி சிகிச்சை, அந்தந்த விடுதிகளில் அளிக்கப்பட்டது. மேலும், 858 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறையால், உணவு தயாரிக்கும் இடங்களில் உணவு மாதிரிகளை உடனுக்குடன் ஆய்வு செய்வதற்காக 2 நடமாடும் பரிசோதனை ஊர்திகள் செயல்பட்டன.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையினரால் சதுரங்கப்போட்டியில் பங்குபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு யோகா பயிற்சி மற்றும் மன அழுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. ஆயிரத்து 937 வீரர்கள் இதனால் பயன்பெற்றனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மருத்துவர்கள், களப்பணியாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேர் இப்பணியில் முறையான பயிற்சியுடன் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த 44ஆவது சர்வதேச சதுரங்கப்போட்டியினை சீரிய முறையில், செம்மையாக வழிநடத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையின் உயர் அலுவலர்கள், இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஃபைசர் கரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு 73 விழுக்காடு அளவில் அரணாய் இருந்தது... ஃபைசர் நிறுவனம்