சென்னை: இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கடந்த 2023 ஜுலை மாதம் முதல் வாரத்தில் பதிவுத்துறையில் சென்னை மண்டலத்தில் பணியாற்றி வந்த அனைத்து சார்பதிவாளர் அலுவலர்களும் மாற்றப்பட்டு, புதிதாக சார்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர். பல வருடங்களாகத் தொடர்ந்து சென்னையிலேயே பல சார்பதிவாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் பல புகார்களும் தொடர்ந்து பெறப்பட்டு வந்தன.
எனவே, நிர்வாக நலன் கருதி சென்னை மண்டலத்தின் அனைத்து சார்பதிவாளர்களும் முழுமையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எந்தவித இடையூறோ வெளி அழுத்தமோ இன்றி வெளிப்படையான முறையில் பொதுமக்கள் நலன் மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து சார்பதிவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
சென்னை மண்டலத்தில் குறிப்பிட்ட 23 இடங்கள் பகராண்மையில் (டெபுடேஷன்) மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்பது போன்றும் ஒரு சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் தவறான கருத்தாகும். இதற்கென ஒரு நிர்வாக காரணம் தனியே உள்ளது.
சென்னையில் உள்ள 20 சார்பதிவாளர் அலுவலகங்களில் மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே சார்பதிவாளர்களாக பணியாற்ற ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள 54 பதிவு மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பணியிடங்கள் மாவட்டப் பதிவாளர்களுக்கென உள்ளன. ஒன்று மாவட்ட பதிவாளர் நிர்வாகம், மற்றொன்று மாவட்ட பதிவாளர் தணிக்கை என கூறப்பட்டுள்ளது.
பதிவுத்துறையில் மறுசீரமைப்புப் பணியின் தொடர்ச்சியாக சமீபத்தில் புதிதாக 5 பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அனைத்து பதிவு மாவட்டங்களிலும் இந்த மாவட்ட பதிவாளர் நிர்வாகம் மற்றும் தணிக்கை பணியிடங்களை நிரப்ப வேண்டி இருந்தது. ஒரு பக்கம் இவ்விரண்டு பணியிடங்களும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த நிலையில், மாவட்ட பதிவாளர் நிலையில் சென்னையில் 20 இடங்களில் மாவட்ட பதிவாளர்களே சார்பதிவாளர்களாக பதிவுப் பணியை மேற்கொண்டு வந்தனர்.