சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என உத்தரவிட்ட அரசு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுத்திருந்தது. இந்த விதிகளை எதிர்த்தும், அர்ச்சகர் பள்ளிகள் நடத்துவதை எதிர்த்தும், அர்ச்சகர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு ஆகமம் உள்ளதாகவும், அர்ச்சகர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார். ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.