சென்னை:மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 பகுதி 1, பகுதி 2, மூலதன நிதி, வெள்ள தடுப்பு நிதி, உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதி ஆகிய திட்டங்களின் மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கோவளம் வடிநிலப்பகுதிகளில் ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியுடன் ஆயிரத்து 714 கோடி ரூபாய் மதிப்பில் 360 கி.மீ., நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தலைமையில் இன்று ரிப்பன் கட்டட கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவை, “மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் ஒவ்வொரு ஐந்து மீட்டர் இடைவெளியிலும் கசடு சேகரிப்பு தொட்டி அமைப்பதை உறுதி செய்யவும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் கசடு சேகரிப்பு தொட்டி இல்லாமல் இருந்தால் உடனடியாக அமைக்கவும், ஏற்கனவே உள்ள கசடு சேகரிப்பு தொட்டிகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.
மழைநீர் வடிகால் பணிகளின்போது ஏற்கனவே சிதலமடைந்து மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள மனித நுழைவாயில் மூடிகளை மாற்றும்போது அவற்றின் தரம் மற்றும் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மாம்பலம் கால்வாயின் மொத்த நீளமான 5.6 கி.மீ., நீளத்திற்கு முழுவதும் தூர்வார பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை சுமார் 2.5 கி.மீ., நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 467 மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள நீளத்திற்கும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும்போது அந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டுவதற்கு முன்பாக அருகிலுள்ள மரங்களின் கிளைகளை அகற்றி பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்க்காக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்... கடந்த பருவமழையின்போது அதிகளவு மழை நீர் தேங்கிய திரு.வி.க. நகர் மண்டலம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்கப்பட்டனர். திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு துணை ஆணையாளர், (வருவாய் மற்றும் நிதி) விஷு மஹாஜன், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு இணை ஆணையாளர் (சுகாதாரம்)சங்கர்லால் குமாவத் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:நொச்சிக்குப்பத்தில் அதிநவீன மீன் விற்பனையகம் - மாதிரி படம் வெளியீடு!