சென்னை:இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று (ஜூலை 30) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறையின்கீழ் தமிழ்நாட்டில் அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவை தவிர 16 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இளநிலை இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்களும் உள்ளன. 1660 இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
மேலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகின்றன. இந்தப் படிப்பிற்கு நீட் தேர்வு மதிப்பெண் தேவையில்லை. மேலும், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக் காண விண்ணப்ப விநியோகம் ஜூலை 30 முதல் https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 14 வரை மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.