சென்னை:தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் தமிழ் இலக்கியத் திறனை அறிவதற்காக ஆண்டுதோறும் தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு, நாளை முதல் 20ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்விற்கு சில தகுதி அடிப்படையின் கீழ், 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதி அடிப்படையின் கீழ் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் தலா 1,500 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளி மாணவர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று, தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வருகின்ற அக்டோபர் 15ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூபாய் 1500 வீதம் ஊக்கத்தொகையாக இரண்டு வருடங்களுக்கு வழக்கப்படும். இத்தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வுச் செய்யப்படுவார்கள்.