சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2020-21 ஆம் கல்வியாண்டில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் அங்கீகாரம் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் 529 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
அவற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 துறைக் கல்லூரிகள், 13 உறுப்புக்கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 4 மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், 498 தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டன.
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கு இந்த மாதம் இறுதி வரையில் கால நீடிப்பு வழங்கி உள்ளது. போதிய மாணவர் சேர்க்கை இல்லாத தனியார் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் மூடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் தற்போது வரை 9 தனியார் பொறியியல் கல்லூரிகளி்ல் முதலாம் ஆண்டில் மாணவர்களை சேர்க்க விரும்பவில்லை எனவும், 7 கல்லூரிகளை மூடுவதற்கும் அனுமதி கோரி அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இருக்கின்றன. அதே நேரத்தில் ஐந்து புதிய கல்லூரிகள் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றன.
மேலும் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத, தகுதியான ஆசிரியர்கள் இல்லாத பாடப்பிரிவுகளை மூடுவதற்கும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது. நடப்பு கல்வி ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக கல்லூரி வாரியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க:நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை