சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் மாணவர்கள் சேருவதற்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, "தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணமாக மாணவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது.