சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை (செப்.22) ஐபோனின் புதிய மாடலான ஐபோன் 15 சீரிஸ் விற்பனை இந்தியாவில் துவங்கப்பட்டது. இந்நிலையில் விற்பனை துவங்கிய இரண்டே நாட்களில் வரலாறு காணாத அளவிற்கு ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது முன்னர் வெளியான ஐபோன் 14 சீரிஸ் மொபைல் போன்களுடன் ஒப்பிடுகையில் ஐபோன் 15 வகை போன்கள் 100 சதவீதம் வரை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன்களுக்கு இருக்கும் மதிப்பை கொண்டு அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் ஐபோன் உற்பத்தியை 5 மடங்காக அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதையடுத்து ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐபோன் நிறுவனம் தயாரித்த ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகிய 2 மொபைல்களும் இந்தியாவில் அதிகளவில் புக்கிங் ஆகி உள்ள நிலையில், இந்த வகை மாடல்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு இந்தியாவில் இருக்கும் சந்தைமதிப்பை கண்டு அடுத்த 5 ஆண்டுகளில் 40 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆப்பிள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்.12 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் "வொண்டர்லஸ்ட்" (Wonderlust) நிகழ்ச்சியில், ஐபோன் 15 சீரிஸ் வகைகள் மற்றும் ஆப்பிள் வாட்ச் வகைகளையும் வெளியிட்டது. இதில் முன்னதாக ஆப்பிள் ஐபோன்களில் Type-C ரக சார்ஜர்கள் கொண்டு வருவது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள ஐபோன் 15 சீரிஸ் வகையில் அறிமுகம் செய்துள்ளது.