சென்னை:ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்துவரும் பிரகாஷ் என்பவர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "டெல்லி பாட்டிலிங் சேவைகள் (DL Bottling Services) நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகுமார், சண்முகம், ஐசிஐசிஐ வங்கியின் விற்பனை நிர்வாகிகள் ஹரி, மாதவன்ராம் ஆகியோர் சேர்ந்து போலியான ஆவணங்களை தங்கள் வங்கியில் கொடுத்து, அவர்களுக்கும், அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் என 103 கிரெடிட் கார்டுகளை வாங்கி உபயோகித்துவிட்டு, 75 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்" தெரிவித்திருந்தார்.
மோசடியில் சிக்கிய குடும்பம்
அப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார், சண்முகம், ஹரி, மாதவன் ராம் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்தனர். மேலும், 103 கிரெடிட் கார்டுகள் வாங்கிய அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான குரோம்பேட்டையைச் சேர்ந்த சண்முகத்தின் குடும்பத்தாருக்கு மட்டும் ஐந்து கிரெடிட் கார்டுகள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவரின் குடும்பத்தாரான ஹம்சா (சண்முகத்தின் அக்கா), சுந்தரராஜன் (சகோதரன்), வேதாச்சலம் (மாமா), சிவா, தினேஷ் ஆகியோரை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அழைப்புவிடுத்திருந்தனர்.
இதற்கிடையில், ஜூன் 21ஆம் தேதியன்று சண்முகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், “எனது அக்கா, மாமா, சகோதரன் ஆகியோரது கிரெடிட் கார்டுகளை நான்தான் உபயோகித்து, மோசடி செய்தேன். அவர்களுக்கு இதில் சம்பந்தமில்லை” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து நேற்று (ஜூன் 22) மதியம் 12 மணிக்கு சண்முகத்தின் குடும்பத்தினரான ஹம்சா, வேதாச்சலம், சுந்தர்ராஜன் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவில் முன்னிலையாகினர்.