தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டு நாயை இறக்குமதி செய்யலாமா? - உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மத்திய அரசு..! - today latest news

foreign dogs import ban issue case: வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்த அறிவிப்பாணையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

foreign dogs import ban issue case
வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 1:09 PM IST

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பாணையில், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாப்பதற்காக, இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளில் செல்லப் பிராணிகளாகப் பயன்படுத்திய நாய்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் ஆராய்ச்சிக்குத் தேவையான நாய்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் காவல் துறையினரின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குத் தேவையான விலங்குகள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து நாய்களையும் வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக, இறக்குமதி செய்ய தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கென்னல் கிளப், நாய்கள் ஆர்வலர் C.R.பாலகிருஷ்ண பட் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் என எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும், புள்ளிவிவரங்களும் இல்லாமல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டு" என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி, பரிசோதித்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுவதால், உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை எனவும் இறக்குமதிக்கு தடை விதித்து தான் இலக்கை எட்ட முடியும் என்பதில்லை எனவும் கூறி, மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து கடந்த ஜூன் 6ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

மேலும், நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைகழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தும் தமிழக அரசு, அதற்கான விதிகளை 8 வாரத்தில் வகுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாணைக்கு வந்தபோது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் தலையிடுவதும், நீதித்துறை மறு ஆய்வு செய்வதும் நீதிமன்ற அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் அத்தகைய அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசு முழு அதிகாரம் பெற்றுள்ளது என்றும் மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்ததில் தனி நீதிபதி தவறு செய்துவிட்டதாகவும் வாதிட்டார்.

இதை அடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சதுரங்க வேட்டை பாணியில் நடந்த இரிடியம் மோசடி... ஜாமீன் கேட்டு தாக்கல் செய்து மனு தள்ளுபடி - நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details