சென்னை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் தாக்கல்செய்துள்ள மனுவில், கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அன்றைய நாள் கோயில்களைத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கைவைத்துள்ளார்.
ஏற்கனவே வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தரிசனத்திற்காகக் கோயில்களைத் திறக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கையாக வைத்துள்ளார்.
இந்த மனு பட்டியலில் விசாரணைக்கு வராததால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விஜயதசமியன்று மட்டும் கோயிலைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகள் ஆர். மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார்.