சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராஜா மற்றும் அமுதா ஆகியோருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அவரது கணவர் ராமசாமி, ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், சசிகலா புஷ்பா உள்பட மூன்று பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், காவல் துறையினர் தன்னை கைது முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தொழில் சம்பந்தமாக தன்னை சந்திக்க வந்த இருவரும் புறப்பட 11 மணிக்கு மேலாகி விட்டதாகவும், கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வீட்டில் தங்க அனுமதித்ததாகவும், தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது கணவர் ராமசாமி தான், தன்னை மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.