சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது, இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழ்நாட்டிற்கு இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற நேரங்களில் அதனை எதிர்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பு தேவை என்பதால், மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடக் கோரியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் ஏதும் இல்லை என்றும் மனுவில் கூறியுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்புப்படை அமைக்க கோரி வழக்கு தொடர்ந்தது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.