சென்னை:கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமால் சிலையை பூசாரி ஒருவர் திருடி கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு வழக்கறிஞருக்கு விற்பனை செய்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக சட்டவிரோதமாக சிலைகளை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலை வாங்குபவர்கள் போல நடிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவிநாசி சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பில் தரகர் ஒருவர் மாறுவேடத்தில் இருந்த போலீசாரை அணுகி, 600 ஆண்டுகள் பழமையான திருமால் சிலை ஒன்று இருப்பதாகவும், அதன் விலை ரூ.33 கோடி எனவும் அந்த சிலை தனது நண்பர் வழக்கறிஞர் பழனிசாமியிடம் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலையை வாங்குவதாக போலீசார் ஒப்புக் கொண்ட பின்னர், அந்த சிலையை காண்பிப்பதற்காக வழக்கறிஞர் பழனிசாமி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது வழக்கறிஞர் பழனிசாமியிடம் ரூ.15 கோடிக்கு சிலைகளை வாங்கிக் கொள்வதாக பேரம் பேசி உறுதி அளித்துள்ளனர்.
இதை நம்பிய பழனிச்சாமி மறுநாள் சிலையை ரூ.15 கோடி விற்க கொண்டு வரும்போது, மறைந்திருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழனிச்சாமியை சுற்றி வளைத்து பாலாஜி சிலையை மீட்டனர்.
பிடிபட்ட வழக்கறிஞர் பழனிச்சாமியிடம் சிலைக்குண்டான முறையான ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழக்கறிஞர் பழனிச்சாமி நடராஜன் என்பவரிடம் ஜூனியர் ஆக பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.