சென்னை:மள்ளர் மீட்பு களத்தின் நிறுவனரும், மீண்டெழும் பாண்டியன் வரலாறு புத்தகத்தின் ஆசிரியருமான செந்தில் மள்ளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திராவிட கருத்தியலுக்கு எதிராக ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் திட்டமிட்டு, அதை ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று, பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தின் உள்ளரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேலும், தமிழர் சமுதாய கூட்டமைப்பின் சார்பில் அனுமதி கோரி, விண்ணப்பித்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, நவம்பர் 1ஆம் தேதியன்று திராவிட ஒழிப்பு மாநாட்டை நடத்த அனுமதி வழங்கவும், 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.விஜயேந்திரன், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி காவல் ஆய்வாளரிடம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி விண்ணப்பித்ததாகவும், ஆனால் மாநாடு நடக்க இருந்த நாளன்று கடைசி நேரத்தில், அனுமதி மறுத்து காவல் ஆய்வாளர் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து சுதந்திரத்தை தடுக்க கூடாது: காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் அமைப்பின் கூட்டத்தில் திராவிட கொள்கை குறித்த கருத்துகள் பெரும்பான்மைக்கு விரோதமாக பரிமாறப்படலாம் என்பதற்காக, அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தடை செய்ய கூடாது என்று கூறினார்.