சென்னை:அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான டி.நகர் சத்யாவிற்கு சொந்தமான 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (செப் 13) காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சத்யாவின் வீட்டின் வெளியே ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் சம்பவ இடத்திற்கு சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்தார். அதன் பிறகு அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று (செப். 13) காலை முதல் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை மாலையில் நிறைவு பெற்றது. இது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், "கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்யா அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் மகன் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.
அதன்படி நேற்று(செப். 13) காலை முதல் சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர் ஆகிய 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் சத்யாவின் இல்லம் மற்றும் தொடர்புடைய இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.