தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TANGEDCO பொறியாளர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு - அதிமுக ஆட்சியில் நடந்தது என்ன? - சென்னை கிரைம்

கடந்த 2011 - 2016 அதிமுக ஆட்சியில் நிலக்கரி போக்குவரத்து டெண்டரில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், TANGEDCO பொறியாளர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

TANGEDCO பொறியாளர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு - அதிமுக ஆட்சியில் நடந்தது என்ன?
TANGEDCO பொறியாளர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு - அதிமுக ஆட்சியில் நடந்தது என்ன?

By

Published : Mar 3, 2023, 10:14 PM IST

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளிக்கும் முழு விவரம்

சென்னை: இவ்விவகாரம் குறித்து அறப்போர் இயக்கம் அளித்த தகவலில், ''கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில், மின்சாரத்திற்காக நிலக்கரியை வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதில் போடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் சார்பில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகாரில் தமிழ்நாட்டிற்குத் தேவையான நிலக்கரி, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் தமிழ்நாட்டு துறைமுகங்களில் கடல் வழியாக கொண்டு வரப்படுகிறது. அதன் பின்பு, அவை அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான தமிழ்நாடு மின்சார வாரியம் மின் பகிர்மான கழகத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் பழனியப்பன், அதிகாரி மனோகரன், பொறியாளர் நரசிம்மன், பொறியாளர் ஸ்ரீநிவாச சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு டெண்டர் ஒதுக்கீடு செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த அதிகாரிகள் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு, மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் விசாரணை செய்தனர்.

நூதன மோசடியில் ஈடுபட்டது எப்படி?விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு கடல் வழியாக நிலக்கரியை எடுத்து வர 2011ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை 1,267 கோடி ரூபாய் செலவானதாக கணக்குக் காட்டி, TANGEDCO நிறுவனத்தில் இழப்பீடு ஏற்படுத்தியுள்ளது.

இந்த காலகட்டத்தில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் விசாகப்பட்டினம் தொழிலாளர் நல வாரியம் நிர்ணயித்த தொழிலாளர் சம்பளத்தில் பொய்யாக கணக்குக் காட்டி, இந்த மோசடியை அரங்கேற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேநேரம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்கி, மீண்டும் கப்பலில் ஏற்றுவதற்கு 149 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், டான்ஜெட்கோ சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலக்கரி போக்குவரத்திற்கான இந்தத் தொகையில் 131 ரூபாய் என்ற அளவு குறைக்கப்பட்டது. அதுவும், இந்த தொகையானது துறைமுகத்தில் நிரந்தரமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறாக 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நிலக்கரியை தமிழ்நாட்டு துறைமுகங்களுக்கு கொண்டு வந்ததற்கான செலவு 1,267 கோடி ரூபாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து டேன்ஜட்கோ தலைவர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியபோது, இந்த காலகட்டத்தில் நிலக்கரி போக்குவரத்திற்கான செலவு 239 கோடி ரூபாய் மட்டுமே சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தால் செலுத்தப்பட்டது என பதில் அளித்துள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் குறிப்பாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளே பணியில் இருந்ததால் அதை மறைத்துள்ளனர்.

மேலும் விசாகப்பட்டினத்தில் தீர்ப்பாயம் ஒன்றில் இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு, ஆவணங்களை அடிப்படையாக வைத்தும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் அறப்போர் இயக்கம் சார்பில் இந்த மெகா ஊழல் வெளியாகி உள்ளது.

மேலும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிரந்தர தொழிலாளர்களை பயன்படுத்தாமல் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு தற்காலிகப் பணியாளர்களை பயன்படுத்தி சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்கவும், மீண்டும் கப்பலில் ஏற்றவும் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

சிஏஜி ஆய்விலும் டான்ஜெட்கோ அதிகாரிகள் எதையும் ஆய்வு செய்யாமல், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு விதிகளை மீறி பணத்தைக் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த முறைகேடானது 2001ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2001ஆம் ஆண்டு நிலக்கரி போக்குவரத்திற்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யும்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டான்ஜெட்கோ அதிகாரிகள் குழு, சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சாதகமாக விதிகளை வளைத்து டெண்டரை ஒதுக்கியதும் அம்பலமாகியுள்ளது.

10 பேர் கைது: 2001ஆம் ஆண்டு கால கட்டத்தில், அந்த டெண்டரில் பங்கேற்ற வெஸ்டர்ன் எனர்ஜி என்ற நிறுவனம், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இந்த டெண்டரை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து இடைக்கால தடை ஒன்றையும் பெற்றுள்ளது. இருப்பினும், சென்னை சிவில் நீதிமன்றம் பிறப்பித்த தடையை பொருட்படுத்தாமல், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு குற்றம்சாட்டப்பட்ட ஐந்து டேன்ஜெட்கோ அதிகாரிகள், நிலக்கரி போக்குவரத்திற்கான டெண்டரை நீட்டித்து மோசடி செய்துள்ளனர்.

மேலும் சென்னை சிவில் நீதிமன்றத்தில் தடை பெற்ற வெஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து நாடகமாடி இந்த வழக்கை தாக்கல் செய்து தடையை வாங்கி இருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் 908 கோடி ரூபாய் அளவில் இழப்பீடு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த மெகா மோசடி தொடர்பாக தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக 2001 முதல் 2019ஆம் ஆண்டு வரை டான் ஜெட்கோவில் தலைமைப் பொறியாளராக இருந்த பழனியப்பன், இயக்குநராக இருந்த செல்லப்பன், அதிகாரி மனோகரன், பொறியாளர் நரசிம்மன் மற்றும் பொறியாளர் ஸ்ரீனிவாச சங்கர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பழனியப்பன், இந்த மோசடிக்கு சாதகமாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த வெஸ்டர்ன் ஏஜென்சி நிறுவனத்தின் நிர்வாகிகள் ராஜன் மற்றும் குஞ்சு கண்ணன் என 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதேநேரம் இந்த மோசடிக்கு இந்த காலகட்டத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்''என தகவல் அளித்துள்ளது.

இதையும் படிங்க:கொள்ளையடித்த பணத்தில் கோவாவில் 13 மாடல் அழகிகளுடன் உல்லாசம் - முக்கிய குற்றவாளி சிக்கிய கதை!

ABOUT THE AUTHOR

...view details