சென்னையில் பெரும்பாலும் நடைபெறும் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, பணத்திற்காக கொலை, மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு, திருட்டு வாகனங்களையே குற்றவாளிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை கைது செய்யும்போது திருட்டு வாகனம் என்பது பறிமுதல் செய்யப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 1,420 வாகனங்கள் திருடு போவதாக காவல்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வாகனங்கள் திருடு போவதைத் தடுக்கவும், திருடப்பட்ட வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் சென்னை காவல்துறை புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில் TROZ எனப்படும் போக்குவரத்து முறைப்படுத்துதல் கண்காணிப்பு மண்டல திட்டம் அடிப்படையில் 200 அதிநவீன "ஏஎன்பிஆர் கேமராவை" சென்னை முழுவதும் 50 இடங்களில் பொருத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு, சென்னையில் பொருத்தும் பணி நடைபெற இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, ஏற்கனவே 16 இடங்களில் பொருத்தப்பட்ட "ஏஎன்பிஆர் கேமராக்கள்" 2018-19 காலகட்டத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன எண்களை படம் பிடித்து வைத்திருக்கும். அதன்பின் அந்த வாகன எண்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து சலான் அனுப்பி வைப்பார்கள்.
அதனை மேலும், நவீனப்படுத்தி "ஏஎன்பிஆர் கேமராக்களில்" மத்திய அரசின் நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை "வாகன்" தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படுவதால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன எண்களை அடையாளம் கண்டுபிடித்து தானாகவே இ-சலான் உருவாக்கி சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அபராதம் விதிக்கும் நடைமுறை செயல்பட்டு வருகிறது.