தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது' - சென்னை உயர் நீதிமன்றம்! - சென்னை உயர் நீதிமன்றம்

விழுப்புரம்: குற்ற பின்னணி குறித்து விசாரிக்காமல் காவலர் வேலைக்கு ஆள்களை சேர்த்தால், மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

another Satankulam incident is likely to take place if the police recruit people without inquiring into the criminal background
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Aug 23, 2020, 2:19 AM IST

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "விழுப்புரம் மாவட்டம் கணை காவல் நிலையத்தில் என் மீது 2016ஆம் ஆண்டு மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் புகார்தாரர் சமரசமாக போவதாக கூறியும், அதை விழுப்புரம் மாஜிஸ்திரேட் ஏற்கவில்லை.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி என்னை கவுரவ விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் பணிக்கு விண்ணப்பம் செய்து, எல்லா போட்டிகளிலும் தேர்ச்சிப் பெற்றேன்.

காவல் நிலையத்தில் என் மீது வழக்கு உள்ளதா என சரிபார்ப்பின்போது, என்னை விடுதலை செய்ய தீர்ப்பு நகலை காவல் துறையினரிடம் கொடுத்தேன். இந்த நிலையில் என்னை காவல் பணிக்கு சேர்க்க முடியாது என்று கூறி கடந்த மார்ச் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும், எனக்கு காவலர் பணி வழங்க உத்தரவிடவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்குரைஞர் ஜெனரல் நர்மதா சம்பத், "மனுதாரர் குற்ற வழக்கில் கவுரவமாக வழக்கில் இருந்து கீழ்கோர்ட்டு விடுவிக்கவில்லை. சந்தேகத்தின் பலனாகத்தான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் காவலர் வேலைக் கேட்டு உரிமை கோர முடியாது. வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போது குற்றவழக்கு விவரம் குறித்து குறிப்பிடவில்லை. காவல் சரிபார்ப்பின்போது தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

எனவே இவருக்கு வேலை வழங்குவது என்பது அலுவலர்களின் விருப்பமே தவிர, அதில் மனுதாரர் உரிமை கோர முடியாது" என வாதிட்டார். மனுதாரர் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த தீர்ப்பில், மனுதாரர் விண்ணப்பம் செய்யும்போது குற்றவழக்கு விவரத்தை குறிப்பிடவில்லை. காவல் சரிபார்ப்பு பணியின்போது தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மேலும், அவர் மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை படித்து பார்க்கும்போது, அவர் சந்தேகத்தின் பலனாக வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

அண்மைகாலமாக தமிழ்நாட்டி காவல் துறை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மனுதாரர் போன்றவர்களின் குற்றப்பின்னணி, குணம் உள்ளிட்டவைகளை ஆராயாமல், காவலர் வேலை கொடுத்தால், இன்னொரு சாத்தான்குளம் (விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை காவலர் அடித்துக் கொன்ற) சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் ஒழுக்கம் சார்ந்த பணியான காவலர் வேலைக்கு, குற்ற வழக்கில் முன்பு சிக்கிய மனுதாரர் உரிமை கோர முடியாது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என தீர்ப்பளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details