தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஆர்பி செவிலியர்கள் கைது விவகாரம்; போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள், செவிலியர்கள் சங்கங்கள்! - MRB nurse

MRB Nurses Development Association: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் எம்ஆர்பி (MRB) செவிலியர்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக, தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

MRB Nurses Development
எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 11:19 AM IST

சென்னை:தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் எம்ஆர்பி (MRB) செவிலியர்கள் போராட்டத்திற்கு அதிகாலையில் வந்தவர்களை காவல் துறையினர் அனுமதிக்காததால் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் செய்வதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து எம்ஆர்பி செவிலியர்கள் வளாகத்திற்குள் செல்வதற்கு காவல் துறையினர் வாயில் கதவுகளைத் திறந்து விட்டனர். பின்னர், எம்ஆர்பி செவிலியர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 356-இல் தொகுப்பு ஊதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி இருந்தது.

ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை எனவும், புதிதாக தொடங்கப்பட்டு உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இரண்டாம் கட்டமாக நிரப்பப்பட வேண்டிய செவிலியர் பணி இடங்கள் இன்று வரை நிரப்பப்படாமல் உள்ளது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், ‘காலவரையற்ற உண்ணாவிரதம், அக்.10ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சுவார்த்தை என்று கூறிவிட்டு செவிலியர்களை கைது செய்ததைக் கண்டித்தும், கைது செய்த செவிலியர்களை டிஎம்எஸ் வளாகத்திற்கு கொண்டு வர வேண்டும். காவல் துறை கட்டுபாட்டில் உள்ள இணைச் செயலாளர் விக்னேஷை விடுவிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் டிஎம்எஸ் வரும் வரை பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. கைது செய்யப்பட்ட செவிலியர்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள செவிலியர்களும் தீர்வு வரும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடர்வது என முடிவு செய்யபட்டு உள்ளது” என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், காவல் துறை சில செவிலியர்களை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டிற்குச் செல்லுமாறு சொல்வதாக தகவல்கள் வருகின்றன. போராட்டத்தின் தீவிரத்தைக் குறைப்பதற்காக அரசு எடுக்கும் எந்த முயற்சிக்கும் செவி சாய்க்காமல் செவிலியர் அனைவரும் ஒன்றுபட்டு நமது கோரிக்கைக்காக போராடுவோம். செவிலியர்கள் யாரும் வீட்டிற்கு திரும்பச் செல்ல வேண்டாம். டிஎம்எஸ் வளாகத்திலோ அல்லது மண்டபத்திலோ சக செவிலியர்களுடன் சேர்ந்து இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராடிய தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் மற்றும் ஜனநாயக ரீதியில் போராடியவர்களை பெண்கள் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக கைது செய்து அலைக்கழித்து பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட எம்ஆர்பி செவிலியர்களை உடனடியாக விடுதலை செய்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்க்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை; கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!

ABOUT THE AUTHOR

...view details