தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாக பல்வேறு கட்டங்களாக வகுப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்கள் ஆசிரியர்களை சந்திப்பதற்கு அனுமதிப்பதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா காரணமாக, கடந்த ஜூன் மாதம் தொடங்க வேண்டிய நடப்பு கல்வியாண்டு தற்போது வரை திறக்கப்படவில்லை. எனினும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையிலான நடவடிக்கை தற்காலிகமானது.
தவிர, மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று படிப்பதன் மூலம் மட்டுமே முழுமையான கல்வியைப் பெற முடியும் என கல்வித் துறை கருதுகிறது. எனவே படிப்படியாக வகுப்புகளை தொடங்குவது குறித்து விரைவில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களை இந்த மாதம் 21ஆம் தேதி முதல் ஆசிரியர்களை சந்திக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.