தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 - 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வை முன்கூட்டியே நடத்த திட்டம்? - Education news in tamil

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வினை முன்கூட்டியே நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 - 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வை முன்கூட்டியே நடத்த திட்டம்?
1 - 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வை முன்கூட்டியே நடத்த திட்டம்?

By

Published : Mar 15, 2023, 7:55 PM IST

சென்னை:நாட்டில் தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் அதிகளவில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்தியாவில் ஏஎச்1என்1, எச்3என்2, எச்2என்2 , இன்புளூயன்சா பி உள்ளிட்ட காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. மேலும் பருவ காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.

இந்த தொற்று 3 முதல் 4 நாட்கள் வரை மனித உடலில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் அறிகுறிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தெலங்கானா மாநிலத்தில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள், வருகிற ஏப்ரல் 24 அன்று தொடங்கி 30ஆம் தேதி வரை நடத்தப்படும் என திட்டமிடப்பட்டு, அதனை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, வைரஸ் காய்சல் பரவல் காரணமாக முன்கூட்டியே இந்த மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் அடிப்படையில், ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வை, ஏப்ரல் 17ஆம் தேதியே தொடங்கி, 24ஆம் தேதி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்படவில்லை. மேலும் வழக்கத்தை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு வெயிலினால் உடலில் பல்வேறு சரும நோய்கள் வரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்றைய முன்தினம் (மார்ச் 13) மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. இதனையடுத்து நேற்று (மார்ச் 14) 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி உள்ளது. மேலும் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதிலும், நேற்றைய முன்தினம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தமிழ் தேர்வில் 50,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

அதேபோல் நேற்று நடைபெற்ற 11ஆம் வகுப்பு தமிழ் தேர்வில் 12,660 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேநேரம் தேர்வு எழுத வராத பள்ளி மாணவர்களை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் தொடர்பு கொண்டு மீதம் உள்ள தேர்வுகளை எழுத வைக்கவும், தனித் தேர்வர்களை மாவட்ட நிர்வாகம் மூலம் கண்டறிந்து தேர்வு எழுத வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தேர்வை தவறவிட்ட மாணவர்களை ஜூன் மாதம் நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுத வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வீடியோ:தேர்வு எழுதிய மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாடல்

ABOUT THE AUTHOR

...view details