கரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடைபெற வேண்டிய மருத்துவத் தேர்வுகள் நடப்பாண்டில் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. தற்போது நோய்ப் பரவல் சற்று குறைந்துள்ளதாலும், மாணவர்களின் நலன் கருதியும் தேர்வுகளை நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறுகையில், "கரோனா தொற்றால் நடப்பாண்டில் சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, டி.எம்., எம்.சி.ஹெச்., ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு தேர்வுகளும், எம்டி, எம்எஸ், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வுகளும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்படும். எம்டி,எம்எஸ் தேர்வுகளைப் பொறுத்தவரை ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றன. கரோனா பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவர்கள் சிலர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாமல் இருந்தனர். அவர்களுக்கும் இம்முறை தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும்.