தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல் தொழில்நுட்பவியல் துறை குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில், இந்தியாவின் மென்பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், 30 விழுக்காடு பங்களிப்பை தமிழ்நாடு அளித்து வருகிறது. சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை இத்துறையின் மூலம் தமிழ்நாடு செய்துள்ளதாக, இந்திய மின்னணு தொழிற்சாலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இத்துறை சுமார் 40 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உலகெங்கும் உள்ள மின்னணு உற்பத்தித் தொழில்களின் முதலீட்டை தமிழ்நாட்டில் ஈர்க்கும் விதமாக 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் நான்கு இடங்களில் மின்னணு உற்பத்தி தொகுப்பு மண்டலங்களை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் அமைக்கும்.
பொதுமக்கள் இணைய வழியில் பாதுகாப்பான பணப் பரிமாற்றம் செய்யவும், பல்வேறு தரப்பிலிருந்து தொடுக்கப்படும் இணைய வழி தாக்குதல்களை எதிர்கொள்ளவும், பொது மற்றும் தனியார் தரவு உள்கட்டமைப்புகளை பாதுகாத்திடவும் வழிவகை செய்யும் “இணைய பாதுகாப்புக் கொள்கை” வெளியிடப்படும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தமிழ்நாட்டின் 13 முக்கிய அரசுத் துறைகளின் துறைத் தலைவர் அலுவலகங்கள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள ‘எழிலகம்’ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பழமையான கட்டடத்தின் பராமரிப்புச் செலவு மிக அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே, அதே இடத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும். இக்கட்டடம் அருகில் உள்ள பாரம்பரிய கட்டடங்களுக்கு நிகராக கட்டப்படும்.
கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சங்கரன்கோயில், குடியாத்தம், ஸ்ரீபெரும்புதூர், வாணியம்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய 5 கோட்டங்களுக்கு 16.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்படும். அதே போன்று திருவெண்ணைநல்லூர், கல்வராயன்மலை, கலவை, கே.வி.குப்பம், குன்றத்தூர், வண்டலூர் மற்றும் சோளிங்கர் ஆகிய 7 வட்டங்களுக்கு 28.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்படும்.
பழுதடைந்த வருவாய்த் துறை கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்டித் தரவேண்டும் என்ற அடிப்படையில், சென்னை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, செங்கல்பட்டு மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், 8.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டித் தரப்படும்.
அதேபோல் கள்ளக்குறிச்சி, ஆற்காடு, வாலாஜா, விளாத்திகுளம், திருச்செந்தூர், சாத்தான்குளம், பொன்னேரி, நன்னிலம், மன்னார்குடி மற்றும் குடியாத்தம் ஆகிய 10 வட்டாட்சியர் அலுவலகங்கள், 37.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும். கறம்பக்குடி, பொன்னமராவதி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், வாலாஜா, மேட்டூர், சேலம் (மேற்கு), தூத்துக்குடி, ஆம்பூர், திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய 14 வருவாய் வட்டாட்சியர்களுக்கு, 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். இது தவிர 180 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள், 39.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டித் தரப்படும்.
பேரிடர்களின் போது மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியாக பேரிடர் மீட்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களுக்கானப் பயிற்சியளித்து, உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை மேம்படுத்த, உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களை கொள்முதல் செய்ய 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சாதாரண மக்களும் எளிதாக கையாளும் வகையில், இணைய வழியாக நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் கிடைக்க வகை செய்ய “தமிழ் நிலம்” என்ற ஒரு மென்பொருள் உருவாக்கி, அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, நில ஆவணங்களை புதுப்பித்தல், இணைய வழியாக சொத்து தொடர்பான வில்லங்க விவரங்கள் பற்றி அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
நவீன நிலஅளவைக் கருவிகளான பூகோள நிலைக்கலன் கருவி மற்றும் மின்னணு நில அளவை கருவிகள் கொண்டு முன்னோடியாக கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நிலஅளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முறையை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தேசித்துள்ள நிலையில், முதற்கட்டமாக 40.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நவீன நிலஅளவைக் கருவிகளைக் கொண்டு நிலஅளவைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆதிதிராவிடர் நலத் துறைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - முதலமைச்சர்