இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, "இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது.
தமிழ்நாட்டின் எந்த ஊருக்கும் விமானத்தில் பயணித்தாலும் விமான நிலையத்தை கடந்து வெளியேறும்வரை வேற்று நாட்டிலோ, வேற்று மாநிலத்திலோ இருப்பது போலவே நான் உணர்கிறேன்.
தமிழ்நாட்டிற்குள் விமானத்தில் பயணிப்பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தமிழைப் பேசுபவர்களாகவும் தாய் மொழியாகக் கொண்டவர்களாகவும் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் தமிழில் செய்வதில்லை. மாறாக பெரும்பாலானோருக்கு விளங்காத இந்தியிலும் ஆங்கிலத்திலுமே அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பயணிகளுக்கு அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பது விளங்கவில்லை.
இது குறித்து நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். இந்தப் பயணத்தின்போதும் இது குறித்து விமான பணிப்பெண்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்கள் எனப் பதில் சொன்னார்கள்.