புதுச்சேரி:முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரியில் சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் கல்வி, அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களுக்கு, தலித் மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசை முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்த வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த திட்டங்களில் 5% மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் ஓய்வூதியம் பெற புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட முதியோருக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு ஓய்வூதியம் தரவில்லை. சுமார் 35 ஆயிரம் பேருக்கு 2 மாதங்களாக ஓய்வூதியம் தரவில்லை. முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தவில்லை. சிலிண்டருக்கு மானியமாக ரூ. 300 தரும் திட்டம், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 50,000 நிதி, ரொட்டி, பால் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ. 18,000 எனப் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.
ரங்கசாமி அறிவித்த 95 சதவீத திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எந்த திட்டத்திலும் பலன் பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1000 தரும் திட்டம் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. முதல் மாதம் மட்டும் தொகை தரப்பட்டது. ஆனால், அதற்கான கோப்பு 2வது மாத ஒப்புதலுக்கு தலைமைச்செயலருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த கோப்பினை தலைமைச் செயலர் நிராகரித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கான நிதியுதவி திட்டத்துக்கு எம்எல்ஏ கையொப்பம் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆதாரம் இல்லாமல் தொகையைத் தர முடியுமா என்பது கேள்விக்குறிதான். பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத திட்டங்களை நிறைவேற்ற முடியாது. இதுதொடர்பான கோப்பினை அதிகாரிகள் திருப்பி அனுப்பினால் அதிகாரிகள் மீது முதலமைச்சர் பழி போடுவார்.