சென்னை: திமுகவை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அவர்களது சொத்துப்பட்டியலையும் நேற்று (ஏப்ரல் 14) வெளியிட்டார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "வெளியிடப்பட்டுள்ள ஊழல் பட்டியலின் அடிப்படையில் அடுத்த வார இறுதிக்குள் டெல்லிக்கு சென்று சிபிஐ-யில் வழக்குப்பதிவு செய்ய உள்ளேன். இதை அப்படியே விடப்போவது இல்லை" என்றார்.
உங்கள் மீது திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்களே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "ஊழல் செய்த பணத்தினை வழக்கறிஞர்களிடம் செலவு செய்ய வேண்டி இருப்பதால் வழக்கு தொடர்வார்கள். எந்த பகுதியில் வழக்குப்பதிவு செய்தாலும் அங்கு நான்கு மணி நேரம் எனக்கு கிடைத்தாலும் என் கட்சியை வளர்ப்பதற்காக பயன்படுத்துவேன். வழக்கு தொடர்ந்தாலும் அதற்கு நான் பயப்பட போவதில்லை. நான் குற்றம் சாட்டிய நிறுவனங்கள், என்னுடையது இல்லை என இதுவரையில் திமுகவினர் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அது அவர்களுடையது இல்லை என்றால் மறுப்பு தெரிவிக்கட்டும்.