சென்னை: நேற்று (மே 29) நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியின் இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இதன் பரபரப்பான கடைசி ஆட்டத்தின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் எம்எஸ் தோனி ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஒரே பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதனால் மைதானமே அமைதி காத்தது. இருப்பினும், ரவீந்திர ஜடேஜா களத்தை சரியாகப் பயன்படுத்தினார். ஆட்டத்தின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அப்போது, ஜடேஜா அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் மைதானம் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.
இதனையடுத்து 1 பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி நேரலை ஆகியவற்றில் பார்த்துக் கொண்டிருந்த அனைத்து ரசிகர்களும் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டத் தொடங்கினர்.
ஏன், சிஎஸ்கே கேப்டன் தோனியே ஒரு நிமிடம் மெளனமாக தலை குனிந்த நிலையில் அமர்ந்திருந்தார். இதற்கு அடுத்த நொடியில், ஜடேஜா பவுண்டரியை விளாசி விட்டு, அடுத்த நொடியே மைதானத்தை சுற்றி வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இறுதியாக, தோனி அவரை தூக்கி தனது கண்ணீர் கலந்த மகிழ்ச்சியில் ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தார்.