சென்னை,இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவிலின் பெயரைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் யூடியூபர் கார்த்தி கோபிநாத் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோர் டிவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட டிவிட்டர் பதிவில் வழக்கம்போல் ”திமுக தன்னுடைய அடக்குமுறை உத்திகளை கையாள்கிறது. கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்தி கோபிநாத் மீது சுமத்தப்பட்டவை முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகள் ஆகும். இந்த அரசாங்கம் எந்த நிலைகு சென்று மக்களின் குரலை ஒடுக்கப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி “ ஆவடி காவல்துறையினர் கோவிலைப் புதுப்பிப்பதற்காக நிதி திரட்டிய கார்த்தி கோபிநாத்தை கைது செய்திருப்பது அதிர்சியளிக்கிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 க்கு எதிரானது. கைது செய்ததற்காக காவல் துறையினருக்கு எதிராக வழக்கு தொடர்வேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'ஒரே நாடு ஒரே தேர்தல் வராது... அதற்கு வாய்ப்பே இல்லை' - சுப்பிரமணியன்சுவாமி தடாலடி