சென்னை: ராயப்பேட்டை அமீர் மஹால் எதிர்புறம் உள்ள சென்னை மாநகராட்சி 63ஆவது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சிவ ராஜசேகரின் அலுவலகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி நேற்று (ஜூலை 23) திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது, "பால் முதல் சுடுகாடு வரை அனைத்துக்கும் ஐந்து சதவீதம் வரியை மத்திய அரசு ஏற்றியுள்ளது. ஆகையால், அண்ணாமலை பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தட்டும். அதை விட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமாக சிறப்பாக செயல்பட்டு வரும் மாநில அரசுக்கு எதிராக போராடுவது வேடிக்கையான ஒன்று.
இதுவரை இந்தியாவில் எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒன்றுக்கு இவ்வளவு விலை உயர்வு வந்ததில்லை. அரிசி இலவசமாக கொடுத்த அரசாங்கம், எங்கள் அரசாங்கம். ஆனால் அரிசிக்கு ஐந்து சதவீதம் வரியை ஏற்றி கொடூர செயல்களை மோடி அரசாங்கம் செய்கிறது. மக்களை வரி போட்டு பிழிந்து எடுப்பவர்கள் பாஜக. எனவே, மின் உயர்வு கண்டித்து நடத்தும் போராட்டம் பாஜகவை எதிர்த்து டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு நடத்த வேண்டிய போராட்டமே தவிர தமிழ்நாட்டில் அல்ல.
நேஷனல் ஹெரால்டு என்பது காங்கிரசின் சொத்து. அதன் சொத்து முக்கிய தலைவர்கள் மீதுதான் அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது. எனவே, அதன் மீதான விசாரணை மோடி அரசின் மீது உள்ள தோல்வியை திசை திருப்புவதற்கான காரியம். அதனை காங்கிரஸ் எதிர் கொள்ளும்" என்றார். மேலும், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல, ஆரம்ப காலத்தில் நடந்தது. எனவே தற்போதைய சூழலில் அதற்கு சாத்தியமே இல்லை" என்றும் கூறினார்.
இதையும் படிங்க:"அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதே, மின் கட்டண உயர்வுக்கு காரணம்"