கோவை: பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் அன்னூர் பகுதியில் விவசாய நிலங்கள் டிட்கோ மூலம் கையகபடுத்தும் விவகாரத்தில் பா.ஜ.கவை தாண்டி வந்தால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருதோம்.
இப்போது, தமிழக அரசு 1630 ஏக்கர் தரிசு நிலம் மட்டும் டிட்கோ மூலம் எடுத்து கொள்ளும் எனவும், மீதி இடத்தை விவசாயிகள் கொடுத்தால் மட்டுமே எடுத்து கொள்வோம் என சொல்லி இருக்கின்றது, அரசின் இந்த நடவடிக்கையினை பா.ஜ.க வரவேற்கின்றது என தெரிவித்தார்.
மொத்தமாக எடுக்க இருந்த நிலத்தில் 2100 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதை அரசு இதன் மூலம் ஓப்புகொண்டுள்ளது எனவும், முக்கியமாக அரசு தனது கடமை உணர்ந்து இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை தளர்த்தி அரசு அறிவிக்க வேண்டும் எனவும் இதை கோரிக்கையாக வைக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இரு தினங்களில் விவசாயிகளை பா.ஜ.க விவசாய அணி நிர்வாகிகள் சந்திக்க இருக்கின்றனர் எனவும், அரசு தனது தவறை உணர்ந்து கொண்டு திருத்தி இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அண்ணாமலைக்கும் ஆ.ராசாவிற்கும் பிரச்சினை இல்லை, அண்ணாமலைக்கும் ஊழல்வாதிகளுக்கும் தான் பிரச்சினை என தெரிவித்த அவர், அன்னூர் பகுதி விவசாயிகளின் கருத்தை கேட்டு விட்டு அடுத்த நடவடிக்கை இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழக அரசின் செய்தி குறிப்பு தெளிவாக இருக்கின்றது என தெரிவித்த அவர், நிலமில்லாத அனைவருக்கும் நிலம் கொடுக்க வேண்டும் என்ற திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இதை போராட்டமாக விவசாயிகள் எடுத்தால் ஆதரிப்போம் எனவும் தெரிவித்தார்.
ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தாரா என்பது சந்தேகமாக இருக்கின்றது என தெரிவித்த அவர், மத்திய அரசிடம் தொழிற்சாலை துவங்க அனுமதி பெற 1994 ல் 50 கோடி வரை என இருந்தது, 2004 ல் 100 கோடியாக மாற்றப்பட்டு 2006 ல் மாநில அரசுக்கே அதிகாரம் எனவும், 2020 ல் கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் இதை மறைத்து ஆ.ராசா தவறான தகவல்களை சொல்லி திசைதிருப்பி இருக்கின்றார் எனவும் குற்றம்சாட்டினார்.
சூலூர் வாரப்பட்டியில் போராடும் விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கபடும் எனவும், கிணத்துகடவு பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை தொடர்பாக அடுத்தகட்டமாக பா.ஜ.க போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்தார். ஆவின் ஆரஞ்ச் கலர் பால் பாக்கெட் விலை உயர்த்திய பின்னர் 5000 லிட்டர் விற்பனை குறைந்து இருக்கின்றது என தெரிவித்த அவர், ஆவின் நெய் விலையை அமுல் நிறுவனத்துடன் ஒப்பிட்டால் 35 ரூபாய் அதிகமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். திமுக குடும்ப உறுப்பினர் ஒருவர் பால் நிறுவனம் துவங்கி இருக்கின்றார், இல்லை என அவர்கள் மறுத்தால் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் அதை தெரியபடுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் வாட்ச் விலை 3.5 லட்ச ரூபாய் என பகிரப்படுவது குறித்த கேள்விக்கு,
சமீபகாலமாக அரசியலில்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்திற்குள்ளாகிவருகின்றது. கையில் கட்டி இருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய் தான் என தெரிவித்தார். ரபேல் விமானத்தின் பார்ட்ஸ்ஸை வைத்து இந்த வாட்ச் செய்தார்கள். மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றது.
ரபேல் விமானம் ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை, அதன் பாகத்தில் உருவாகி இருக்கும் இந்த வாட்சை கட்டி இருக்கின்றேன். ஒவ்வொரு வாட்ச்சிற்கும் எண் இருக்கும், இது 149 வது வாட்ச் எனவும் என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும் எனவும் தெரிவித்தார். நான் தேசியவாதி, அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கின்றேன், இது என் தனிபட்ட விடயம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அன்னூர் பகுதிக்கு நிலம் கையகப்படுத்த டிட்கோ வந்ததே தண்ணீருக்காக தான் எனவும், இதற்காகதான் பெரிய பெரிய நிறுவனங்கள் அலைகின்றன எனவும் தெரிவித்தார். நாங்குநேரி தொழில்பேட்டையில் 20 வருடத்திற்கு முன்பு திமுக எடுத்த 2000 ஏக்கர் நிலம் இன்னமும் பயன்படுத்தபடவில்லை எனவும் அதை முதலில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். உள்துறை பலமாக இருக்கின்றது என தெரிவித்த அவர் என்.ஐ.ஏ வசம் கோவை கார் வெடிப்பு வழக்கு சென்ற பிறகு வழக்கு விசாரணை திருபத்திகரமாக இருக்கிறது எனவும், அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்களே நேரடியாக வந்து விசாரித்து சென்று இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
உதயநிதி மகன் இன்பநிதி அடுத்து அரசியலுக்கு வரவேண்டும் என திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ தெரிவித்து வருகின்றனர் என கூறி கையில் இருந்த பேப்பரை எடுத்து யாரெல்லாம் என்ன சொல்லி இருக்கின்றனர் என பட்டியலிட்டார் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவி தான் உதயநிதிக்கு கொடுத்து இருக்க வேண்டும் அதுதான் சரியாக இருக்கும் என தெரிவித்த அவர், திமுகவினர் தனிமனிதனுக்காக ஜால்ரா அடிப்பதே வேலையாக இருக்கின்றனர், பழைய வரலாற்றை திமுகவினர் திரும்ப படிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திமுக - பா.ஜ.க கூட்டணி அமைக்க போகின்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, சி.வி.சண்முகம் பா.ஜ.கவில் சேர்த்துவிட்டாரா என தெரியவில்லை எனவும் 4 நாட்களாக கமலாலயம் செல்லவில்லை எனவும் தெரிவித்தார். சி.வி.சண்முகம் பா.ஜ.கவில் சேர்ந்து விட்டாரா என அலுவலகத்தில் கேட்டு சொல்கின்றேன் என தெரிவித்த அவர், பா.ஜ.கவில் இருப்பவர்களால்தான் இது பற்றி கருத்து சொல்ல முடியும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
வரும் 2024க்கான தேர்தல் மோடிக்கான தேர்தல் எனவும், தேர்தலுக்கு இன்னமும் 16 மாதம் இருக்கின்றது என கூறிய அவர், அதிமுக இன்னும் வளர வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். பா.ஜ.க வளர வேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம் என தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது, அதில் ஒ.பன்னீர் செல்வம் தனது மகன் எம்.பி.ரவிந்தீரநாத்துடன் கலந்து கொண்டுள்ளார் என தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை பா.ஜ.க தான் எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.கவை திட்டித்தான் தினமும் முரசொலியில் செய்தி இருக்கின்றது, திமுக சார்ந்த செய்தி நிறுவனங்களில் செய்தி இருக்கின்றது என தெரிவித்த அவர், பா.ஜ.க எங்கே இருக்கின்றது என கேட்டவர்கள் அவர்கள் என தெரிவித்தார். ஆரியம் திராவிடம் என்ற பிரிவினையையே ஏற்காதவன் நான் எனக்கூறிய அவர், டான்டீ நிறுவனம் மலையக தமிழர்களுக்காக துவங்கப்பட்டது, வனத்துறைக்கு ஏன் டான்டீ நிலத்தை திரும்ப கொடுக்கின்றீர்கள் என கேட்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஆ.ராசாவிற்கு சரித்திரம் தெரியவில்லை, டான்டீயை கலைஞர் துவங்கவில்லை, 1964 ல் இருந்து 16 ஆண்டுகளில் படிப்படியாக கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பார்களில் ஸ்பிரிங் என்ற நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகின்றது எனவும் இதுவும் திமுகவிற்கு வேண்டப்பட்ட குடும்பத்தினர் நடத்துவதுதான் எனவும் தெரிவித்தார். தமிழகத்தன் நம்பர் 1 நடிகர் ஸ்டாலின்தான் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க:எடப்பாடியின் மெகா கூட்டணி வியூகம்.. கடம்பூர் ராஜூ சொன்ன ரகசியம்!