தமிழ்நாடு அரசு மீதான அவநம்பிக்கையை மறைக்க எடுத்துள்ள அஸ்திரம், ஆளுநர் எதிர்ப்பு - அண்ணாமலை சென்னை: விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழக ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. மாநில அரசு தன் மீது மக்களிடையே ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை மறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள அஸ்திரம் தான் ஆளுநர் எதிர்ப்பு.
ஆளுநர் 13 மசோதாக்களை ஒப்புதல் வழங்காமல் வைத்துள்ளார் என புகார் தெரிவித்துள்ளார்கள். இதை தமிழக அரசு மக்களிடையே ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடலாம். 13 மசோதாக்களில் 12 மசோதாக்கள் பல்கலைக்கழகங்கள் தொடர்புடையது.
13வது மசோதா சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வானது நீட் அடிப்படையில் உள்ளது. அதை பொதுத் தேர்வாக மாற்ற வேண்டும் என்ற மசோதா. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருந்தாலும், உயர்நிலைப் படிப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கல்வி விதிமுறைகளின் படி ஆளுநருக்குப் பதிலாக பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்பது உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிரானது. இதற்காகவே ஆளுநர் இன்னும் கையெழுத்துப் போடாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஏன் கையெழுத்துப் போடாமல் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
இப்படியாக உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புக்கும் யு.ஜி.சி நடைமுறைகளுக்கும் எதிராக உள்ளது. அப்படி இருக்கும்போது தமிழக அரசு மசோதாவை அனுப்பியவுடன் ஆளுநர் கையெழுத்துப் போட வேண்டும் என கூறுவது முட்டாள்தனமானது. மேலும், 13 மசோதாக்கள் என பெரிதாகக் கூறுவது தவறு 13ம் ஒரே மசோதா தான்.
இதை ஆளுநர் நிராகரித்து தான் அனுப்ப வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பொறுப்பேற்க அதிகபட்ச வயது வரம்பு 62. சைலேந்திரபாபு 61 வயதைக் கடந்துள்ளார். இன்னும் சில மாதங்களே உள்ளன, அவருக்கு 62 வயது ஆவதற்கு. உச்சபட்ச வயதை அடைவதற்கு ஐந்தாண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருப்பவர்களே அந்த பதவிக்கு வர வேண்டும். அதனால் ஆளுநர் அதையும் நிராகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது பலமுறை நடந்துள்ளது. சட்டப் பிரச்சினைகள் இருக்கும் போது ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பி உள்ள 12 மசோதாக்களுக்கும் தமிழக அரசுக்கு அதிகாரமே கிடையாது" என்று அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க:"மாநில அடையாளங்கள் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளதால் ஒற்றுமை உணர்வு பலவீனம் அடைந்துள்ளது" - ஆளுநர் ஆர்.என்.ரவி!