சென்னை: தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்றதில் இருந்து அவர் கொண்டு வரும் திட்டங்கள் குறிப்பாக. 90 எம்.எல் டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை, காலையிலேயே மது கடை திறப்பதற்கான ஆய்வு போன்ற திட்டங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.
இந்த நிலையில், கோவையில் நேற்று (ஜூலை 17) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, “தவிர்க்க முடியாத காரணங்களாலேயே கடுமையான பணி செய்வோர் காலையில் மது அருந்துகின்றனர். காலையிலேயே மது அருந்துவோரை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது” என கூறினார்.
இதனை அடுத்து, தூய்மைப் பணியாளர்களை கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில், மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா அமைச்சர் என்ற கேள்வியை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், “காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன்.
தூய்மைப் பணியாளர்கள் கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் நாள் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை எண் 425, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள், கைகளால் கழிவுகள் அகற்றுவதைத் தடை செய்து உள்ளதாகக் கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் பணியின்போது 56 தூய்மைப் பணியாளர்கள் மரணம் அடைந்து உள்ளனர். ஆனால் அமைச்சரோ, கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில் மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
தூய்மைப் பணியாளர்கள் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு குடும்பத்தில் ஒரு தூய்மைப் பணியாளருக்கு 40,000 ரூபாயும், தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் 3000 ரூபாயும், தூய்மைப் பணி தொடர்பான சுயதொழில் தொடங்க ரூபாய் ஐந்து லட்சம் வரை மானியம், மருத்துவக் காப்பீடு, தூய்மைப் பணியாளர் மரணங்களைத் தடுக்க நமஸ்தே திட்டம் என பல திட்டங்கள் தீட்டி ஆண்டுதோறும் மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இந்தத் திட்டங்களை இதுவரை பயன்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:நாங்கள் எந்த ஈடி சோதனைக்கும் அஞ்சமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்