சென்னை:நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடங்கள் பங்கீடு தொடர்பாக ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சுமார் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு கூட்டணியில் சிக்கல் இல்லை
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. வலுவான எதிர்கட்சியாக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிமுக செயல்பட்டு வருகிறது.
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முழுமையாக முடிந்தவுடன் பத்திரிகைக்கு தெரிவிக்கிறோம். கூட்டணியில் சிக்கல் ஏதும் இல்லை.
பல்வேறு கட்டுப்பாடுகளை இந்த தேர்தலில் சந்திக்க உள்ளோம். முரசொலி பத்திரிகையில் தமிழ்நாடு ஆளுநர் பற்றிய செய்தி வெளியிட்டது அவதூறுதான். மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளுநர் முக்கியமான நபர். ஆளுநர் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை பெருமையாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, கரோனா காலத்தில் செவிலியர்களை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.
ஆளுநர் அவருடைய செயலை சரியாக செய்து வருகிறார். ஆனால், முரசொலி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை தமிழ்நாடு பாஜக வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநர் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவர் இல்லை.
கடந்த 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை அதிமுக நடத்தியுள்ளது. தற்போது, அவர்கள் எங்களை குறைத்தும் மதிப்பிடவில்லை, கசப்பும் எங்களுக்குள் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் என்பது கடினமான ஒன்றாகும். ஆகவே அவசரப்படாமல் பேசி முடிவெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விசிகவிற்கு தலைவர் பதவி - திருமாவளவன் முதலமைச்சரிடம் ஆலோசனை