சென்னை: தமிழகத்தின் பல்வேறு 'என் மண் என் மக்கள்' பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை மக்களிடத்தில் நேரடியாக தெரிவிக்கும் வகையில், அண்ணாமலை மேற்கொண்டுள்ளதாக தமிழக பாஜக தலைமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 2023, டிச.27 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களும் சீருடையுடன் பணியில் இருந்தபடியே, தங்களை பாஜகவில் இணைத்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இதனால், உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றபட்டிருந்த நிலையில், இருவரும் பணியிடைநீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி நேற்று (ஜன.4) உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற முறையில் தமிழக காவல்துறையினருக்கும், தஞ்சை சரக டிஐஜிக்கும் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன்.
'என் மண் என் மக்கள்' நடைபயணத்திற்கு இடையூறு செய்ய ஆளுங்கட்சி பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதும்; ஆனால், அவை ஏதும் எடுபடவில்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் நடந்த 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின்போது, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டதாக கூறி, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மீது பணியிடைநீக்க நடவடிக்கை எடுத்துள்ளது, தமிழக காவல்துறை.
குறிப்பிட்ட தினத்தன்று, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவரும், அந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதை குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து விட்டார்கள் என்ற தவறான தகவலை, அந்தப் பகுதியில் இருந்து பிறர் பரப்பியதன் அடிப்படையில், இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக நான் விசாரித்ததில் தெரியவந்துள்ளது.