சென்னை:மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிச.8) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அம்பத்தூர் தொழிற்சாலை சுமார் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட எம்எஸ்எம்இ (MSMEs) நிறைய தொழில் நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் ரூ.13,000 கோடி வருவாய் ஈட்டி தரக்கூடியவர்கள்.
இங்கு உள்ள மிஷின்கள் எல்லாம் நீரால் சூழ்ந்து பழுதடைந்துள்ளன. இதனால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ஆயிரம் நிறுவனங்கள் அனைத்துமே ஸ்தம்பித்து போய் நிற்கின்றன. இதனால், இவர்கள் உற்பத்தி பண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு உள்ள மிஷின்கள் லோன் அடிப்படையில் வாங்கியுள்ளனர்.
மத்திய அமைச்சரிடம் பாதிப்பு குறித்து தகவல்:தற்போது அவற்றுக்கு லோன் கட்ட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வலியுறுத்துகிறோம். மேலும் மத்திய அமைச்சரிடம் நாளை சந்தித்து இது குறித்து தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும், 'போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இருந்தால் அமைச்சர்கள் களத்தில் இருந்திருப்பார்கள். பொறுப்பு அமைச்சர்கள் களத்தில் இல்லை. இருந்திருந்தால் மக்களின் கோபம் குறைந்து இருக்கும். அரசியல் ரீதியாக, இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். திமுக நிர்வாகிகள் கூட களத்தில் இல்லை.
சம்பளம் வாங்கும் அமைச்சர்கள் களத்திற்கு வரவேண்டும்:கண் கெட்டப் பிறகு, சூரிய நமஸ்காரம் என்பதைப் போல உள்ளது. மக்களுக்கு 234 எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் தேவை இல்லை. இவர்களின் சம்பளம், நிவாரணத் தொகை என்பது ஒரு துளிதான். எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்., அமைச்சர்கள் ஆகியோருக்கு சம்பளம் கொடுப்பதைவிட, களத்திற்கு வந்தால் பிரச்னைத் தீரும். மழை வெள்ளம் குறித்து ஊடகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது' எனக் குற்றம்சாட்டினார்.