தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வாக்கு விழுக்காடு குறைந்ததற்கு திமுக அரசின் அட்டூழியமே காரணம்!' - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அராஜகம் செய்த திமுக அதிகாரத்திற்கு வரக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை
செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை

By

Published : Feb 21, 2022, 6:22 PM IST

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி அராஜகத்தில் ஈடுபட்டதாக சில காணொலிகளை வெளியிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியாக ஆளும் கட்சியான திமுகவினர் சென்னை, கோவையில் அராஜகங்களையும் வன்முறைகளையும் செய்துள்ளது.

குறிப்பாக கோவை, நெல்லை, திருச்சி, சென்னையில் வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகச் சமூக வலைதளங்களில் குற்றஞ்சாட்டி காணொலிகளை வெளியிட்டுவருகின்றனர்.

தேர்தலில் திமுகவினர் நடத்திய அராஜகங்களை மாநில தேர்தல் ஆணையம் கண்மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. இவற்றைத் திசைதிருப்ப மேலூரில் பாஜக வாக்குச்சாவடி முகவர் மீது ஹிஜாப் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு விழுக்காடு 14% குறைந்தற்கு முழுமையான காரணம் ஆளும் கட்சியின் அட்டூழியம் மட்டுமே.

இதனால், மக்களுக்குத் தேர்தல் மீது வெறுப்பை உண்டாக்கி உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து உயர் நீதிமன்றத்திற்கு பாஜக சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. எல். முருகனின் வாக்கு எண் வரிசை 1174இல் அவர் வாக்களிக்கும் முன்பே டிக் செய்துள்ளனர்.

எனவே டெண்டர் வாக்கு அளிக்கக் கோரினர். நாங்கள் முடியாது என்று சொன்னதால் எல். முருகனை வாக்களிக்கச் சொன்னார்கள். அவர் வேறொரு வரிசை எண்ணில் வாக்களித்தார்.

நாளை இரவு 7 மணி வரை வெற்றிச் சான்றிதழை வழங்கக் கூடாது என திமுகவினர் கூறியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளோம், வாக்கு எண்ணிக்கையின்போதே உடனுக்குடன் வெற்றிச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளோம்.

திமுகவினர் கத்திக்குத்து நடந்தால் மட்டுமே அதை வன்முறை என்பார்களா? தேர்தல் நாளில் பல வன்முறை நடந்துள்ளன, அமைதியாக நடந்ததாகக் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. அராஜகம் செய்த திமுக அதிகாரத்திற்கு வரக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகு எங்களது ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்.

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை பாஜக வரவேற்கிறது, 'உங்களுக்கு மத நம்பிக்கைதான் முக்கியம் என்றால் வாக்களிக்கவே வேண்டாம், கடவுச்சீட்டுக்குப் புகைப்படம் எடுக்க முகம் காட்ட அனுமதிக்கும்போது வாக்களிக்கும்போது முக அடையாளம் காட்ட ஹிஜாபை அகற்றக் கூடாதா என உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலூரில் பாஜக முகவர் முகம் காட்டத்தான் சென்னார், ஹிஜாபை அகற்றச் சொல்லவில்லை. வேண்டுமென்றால் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைத் தேர்தல் ஆணையம் வெளியிடட்டும். கண்துடைப்பிற்காகவே இன்று சில வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது” என்றார்.

செய்தியாளரைச் சந்தித்த அண்ணாமலை

அரசியல்வாதிபோல் இல்லாமல் காவல் துறை அலுவலர்போல நீங்கள் நடந்துகொள்வதாகச் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனரே எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, “திமுகவிற்கு எதிராக நான் போலீஸ்காரன்போல இருந்தால்தான் சில விசயங்களைச் செய்ய முடியும்போல. பழைய அட்ஜஸ்ட்மென்ட் அரசியல்வாதியாக இருந்தால் மக்களுக்கு நல்லதல்ல” என்றார்.

அதேபோல் ஜாதி மத அரசியலை பாஜக செய்கிறது என்ற கமலின் கருத்துக்குப் பதில் கூறிய அண்ணாமலை, “விக்ரம் படத்தில் நடிப்பதா, பிக் பாஸில் நடிப்பதா எனக் கமல் குழப்பத்தில் இருக்கிறார். கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்குப் பதில் கூறுவேன். அவர் மக்களுக்கு என்ன செய்கிறார்? சாதி மத அரசியல் செய்வதாக எதை வைத்து எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிறார்” எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:மைக்கேல்பட்டியில் சிபிஐ: மாணவி லாவண்யா மரணம் குறித்து விசாரணை

ABOUT THE AUTHOR

...view details