தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி, ஒடுக்குமுறையை எதிர்த்தவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ் - Nari Shakti

சாதி, ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமை போன்ற சமூக நோய்களை எதிர்த்து பெண்கள் கல்வியின் வாயிலாகப் போராட வேண்டும் என்று கூறிய அன்னை மீனாம்பாள் சிவராஜ் குறித்தான ஒரு தொகுப்பை காணலாம்...

Etv Bharat அன்னை மீனாம்பாள் சிவராஜ்
Etv Bharat அன்னை மீனாம்பாள் சிவராஜ்

By

Published : Aug 10, 2022, 10:21 PM IST

சென்னை:பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண் மீனாம்பாள் சிவராஜ். ரங்கூனில் (பர்மா) டிசம்பர் 26ஆம் தேதி 1904-ஆம் ஆண்டு வி.ஜி.வாசுதேவப்பிள்ளை, மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். இளங்கலை படிப்பை ரங்கூனில் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய மீனாம்பாள், மனதில் சாதி எதிர்ப்பு போராட்டம் தீ பற்றிக் கொண்டது.

இந்திய மண்ணில் நிலவும் சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடவும், சாதிய கட்டமைப்பை தகர்க்கவும் பெண்களை அழைத்தார். ஒடுக்கப்படும் பெண்களுக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்தினார். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாருடன் இணைந்து கொண்டார்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ்

இந்தியாவில் 1928ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தச் சட்டம் எவ்வாறு செயல்படுகின்றன. அடுத்தகட்டமாக என்ன மாதிரியான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிவதற்காக சைமன் குழு இந்தியா வரவிருந்தது. பெரும்பாலான தலைவர்கள், சைமன் குழு இந்தியா வருவதை விரும்பவில்லை. குழு வருகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.

ஆனால், அன்னை மீனாம்பாள் சைமன் குழு வருகையை ஆதரித்துப் பேசி வரவேற்றவர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக மீனாம்பாள் மேற்கொண்ட முதல் அரசியல் பணி என இந்நிகழ்வைச் சொல்லலாம். சைமன் குழுவிடம் ஒடுக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை வழங்க கேட்டுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவராக விளங்கிய மீனாம்பாள், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ்

மேலும் கவுன்சிலர், கௌரவ மாகாண நீதிபதி, திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். 1930ஆம் ஆண்டில் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழ்நாடு மக்களிடம் எடுத்துக் கூறியவர். "என் அன்பு சகோதரி" என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர்.

திராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்த பெருமையும் இவருக்கு உண்டு.
பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தை பெரிதும் ஆதரித்த அன்னை மீனாம்பாளை கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த பெண்ணியவாதி என்று சொன்னால் மிகையாகது. சாதி, ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமை போன்ற சமூக நோய்களை எதிர்த்து பெண்கள் கல்வியின் வாயிலாகப் போராட வேண்டும் என வலியுறுத்தினார்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ்

ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி பலநூறு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு தலைமை தாங்கி சிறப்பித்திருக்கிறார். சுதந்திர போராட்டத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகாகவும் இவரின் பங்கு மிக முக்கியமாக கருந்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் சட்ட அமைச்சராகப் பதவி வகிக்க வேண்டுமா என்று அம்பேத்கர் தயங்கியபோது, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி அதில் வெற்றி பெற்றவர் மீனாம்பாள் சிவராஜ்.

ஜனவரி 31ஆம் தேதி 1937ஆம் ஆண்டு திருநெல்வேலில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் பேசியது, "ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ்

எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிருபிப்பான் வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று ஆதிதிராவிடர்களின் கடைசி தலைவியான அன்னை மீனாம்பாள் சிவராஜ் வலியுறுத்தி பேசினார். சாதி ஒழிப்பு குறித்த அன்னை மீனாம்பாளின் பேச்சு இன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உரிமைகளை பெற்றுக்கொடுத்ததில் இவரின் பங்கு மிகப்பெரியது. இன்றும் மீனாம்பாள் வழியில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல பெண்கள் போராடி கொண்டிருக்கின்றனர். பட்டியலினத்தில் பிறந்த காரணத்துக்காகவே இங்கு மறைக்கப்படும் தலைவர்கள் ஏராளம், அப்படியானவர்களில் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பெண்மணி அன்னை மீனாம்பாள் சிவராஜ்.

இதையும் படிங்க:காமன்வெல்த் போட்டியில் தமிழ்ப்பாடலை ஒலிக்க செய்த பிரான்ஸ் தமிழச்சி யார்?

ABOUT THE AUTHOR

...view details