சென்னை செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தேசிய கல்விக்கொள்கை குறித்த புத்தகத்தை அறிமுகம்செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தற்போது இருக்கக்கூடிய கல்விக்கொள்கை மாணவர்களைப் பட்டதாரிகளாக மட்டுமே ஆக்குகிறதே தவிர படைப்பாளிகளாக மாற்றவில்லை. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை கண்டிப்பாக நாட்டிற்குத் தேவை.
உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தால் மட்டும் போதாது, முதலிடத்தில் இருக்கும் அளவில் தரம் இருக்க வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கையைப் பின்பற்றினால் மட்டுமே 2050 ஆண்டிலாவது இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இருக்க வாய்ப்புள்ளது. அறிவியலுக்கு ஏற்றாற்போல் தமிழ் மொழியில் சொற்கள் இல்லாத காரணத்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளில் தமிழ் வழிக்கல்வி நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது என்பது தவறு. தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:IOE சர்ச்சையின் பின்னணியும், எதிர்ப்பிற்கான நான்கு முக்கியக் காரணிகளும்