சென்னை:சர்வதேச ஊழல் ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற பெயரில் அரசின் முத்திரையைப் பயன்படுத்தி, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்று பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, தொலைக்காட்சி பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலம் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் இதில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். ஆனால், தற்போது இவை அனைத்தும் போலியான டாக்டர் பட்டம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் வேல்ராஜ், “அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா அரங்கில் இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்க்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளனர்.
அதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கை வாடகைக்கு அரை நாளுக்கு கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வரிடம் கேட்டுள்ளனர். அதற்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை.
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட லெட்டர் பேடுடன் வந்து மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அனுமதி கேட்டுனர். ஓய்வுபெற்ற நீதிபதியின் கடிதம் என்பதால் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விருது வழங்குவதற்கான நிகழ்ச்சி என்பதால், அனுமதி வழங்கப்பட்டது.
அதில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தை பயன்படுத்தியது கண்டிக்கத்தது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகமும் ஏமாந்துள்ளார். வள்ளிநாயகத்திடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது எனவும், எங்களிடம் வள்ளிநாயகம் வருகிறார் எனவும் கூறி ஏமாற்றி உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கம் புனிதமான இடம். இந்த இடத்தில் நடைபெற்றதற்கு வருந்துகிறோம். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பல்கலைக்கழகத்தின் பதிவாளர், கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய உள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைத் தவறாக பயன்படுத்தியதன் காரணமாக நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது புகார் அளிக்கப்பட உள்ளது.
ஆன்ட்டி கரப்ஷன் என்ற பெயரில் கரப்ஷன் செய்து விட்டார்கள். மேலும் இந்த கடிதம் குறித்து அவரிடம் (வள்ளிநாயகம்) கேட்க முற்பட்டும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. விவேகானந்தா ஆடிட்டோரியத்தினை வாடகைக்கு அளிக்கும்போது அனைத்தையும் ஆய்வு செய்ய முடியாது. பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் வாடகைக்கு கேட்கும்போது வழங்கி வருகிறோம்.